டெல்லியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பேருந்து  
இந்தியா

ஜன்னலில் திரைகள் கூடாது, கண்காணிப்பு கருவி 24x7 இயங்க வேண்டும் - பேருந்து விதிகளை இறுக்கிய டெல்லி அரசு!

இந்த சம்பவத்திலும் நிர்பாயா வழக்கைப் போலவே, ஜன்னல்களில் தடிமனான திரைகள் (Curtains) தொங்கவிடப்பட்டு வெளிப்பார்வை மறைக்கப்பட்டிருந்தது. கேமராவோ (CCTV) அல்லது செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்புகளோ இல்லை.

மாலை முரசு செய்தி குழு

டெல்லியில் நகரும் பேருந்தில் சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்துக்குப் பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை வழங்கியுள்ளது அரசு.

அபாய எச்சரிக்கை பட்டன்கள் மற்றும் வாகனக் கண்காணிப்பு சாதனங்கள் எப்போதும் பயன்பாட்டில் இருக்க வேண்டும், ஜன்னலில் இருந்து பார்த்தால் உள்ளே தெரிய வேண்டும் என பல்வேறு அம்சங்கள் இந்த வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ளன.

டெல்லி பேருந்துகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வரும் அனைத்துப் பேருந்துகளுக்கும் இந்தப் புதிய உத்தரவு உடனடியாகச் செல்லுபடியாகும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

'நிர்பயா' சம்பவத்தை நினைவுபடுத்திய கொடூரம்!

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, கிரேட்டர் நொய்டாவில் பேருந்தில் ஏறிய 17 வயது சிறுமியை, அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் 40 கி.மீ. தொலைவில் உள்ள காஷ்மீரி கேட் பகுதியில் அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்திலும் நிர்பயா வழக்கைப் போலவே, ஜன்னல்களில் தடிமனான திரைகள் (Curtains) தொங்கவிடப்பட்டு வெளிப்பார்வை மறைக்கப்பட்டிருந்தது. கேமராக்களோ (CCTV) அல்லது செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்புகளோ இல்லை.

டெல்லி அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்

டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு நடைமுறைகளின்படி, பேருந்து ஜன்னல்களில் திரைகள் தொங்கவிடக் கூடாது; விண்ட்ஷீல்டு மற்றும் பக்கவாட்டு ஜன்னல்களில் அனுமதிக்கப்படாத கூலிங் ஃபிலிம்களை (Window Films) ஒட்டக் கூடாது.

டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார்

வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், பேருந்தின் உட்புறம் தெளிவாக தெரிய வேண்டும்.

மேலும், பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள Panic Button மற்றும் வாகனத்தின் இருப்பிடத்தை கண்காணிக்கும் கருவி (Vehicle Location Tracking Devices - VLTD) ஆகியவை எப்போதும் (24x7) இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். பயணிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அவசரக்கால பட்டன்கள் (Panic Buttons) அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்தில் பெண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பாலியல் தொல்லை ஏற்பட்டால், ஓட்டுநரும் நடத்துநரும் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து, பேருந்தை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் பணியாளர்களின் பின்னணிச் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்றும், வெளிச்சமும் பாதுகாப்பும் உள்ள இடங்களில் மட்டுமே பார்க்கிங் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்