இந்தியா

”அதிகரிக்கும் ஐஐடி, ஐஐஎம் - வலுவடையும் நியூ இந்தியா" பிரதமர் பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

அதிகரிக்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி கல்லூரிகளால் புதிய இந்தியாவின் கட்டுமானம் வலுவடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


உலகப்புகழ்பெற்ற டெல்லி பல்கலைக்கழகம், இன்று நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க, டெல்லி மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பிரதமர் மோடி பயணித்தார். தொடர்ந்து பயணத்தின்போது மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் உற்சாகமாக உரையாடினார்.

இதையடுத்து பல்கலைக்கழகம் சென்றடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டெல்லி பல்கலைக்கழகம் நூறாண்டுகளை நிறைவு செய்துள்ள இந்நேரத்தில், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது பெருமையளிப்பதாக தெரிவித்தார்.

21ம் நூற்றாண்டின் இந்த பத்தாண்டுகள், சுதந்திர இயக்கத்தின் வேகத்திற்கு புதிய பாதை அமைத்துக் கொடுத்ததாகவும், அதிகரிக்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி கல்லூரிகளால் புதிய இந்தியாவின் கட்டுமானம் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் உலகளாவிய அங்கீகாரம் அதிகரித்து வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.