இந்தியா

முன்கூட்டியே தொடங்கியுள்ள தென் மேற்கு பருவமழை - எல் நினோ பாதிப்புகள்..

2009, 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ ஏற்பட்டிருக்கிறது

மாலை முரசு செய்தி குழு

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால் தான் நாட்டில் உள்ள நீர் ஆதாரங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. குறிப்பாக நாடு முழுவதும் பரவலாக நீர் கிடைப்பது தென் மேற்கு பருவமழையில்தான். ஆனால் தமிழ் நாட்டிற்கு இந்த தென் மேற்கு பருவமழை நேரடியாக தண்ணீர் தரவில்லை என்றாலும், மறைமுகமாக தண்ணீர் கிடைத்து வருகிறது. பொதுவாக தென் மேற்கு பருவமழை, ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 31-ம் தேதி வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியுள்ளது.  

அந்த வகையில், தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில்  மே 16-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதேபோன்று கேரளாவில் மே 26-ம் தேதிவாக்கில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியதற்கான காரணம் என்ன என்று வானிலை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். 

இதில், வட அரைக்கோளத்தில், குறிப்பாக சைபீரியா பகுதியில் வழக்கத்தை விடக் குறைந்த பனிப்பொழிவு இருந்ததால், நிலப்பகுதி வேகமாக வெப்பமடைந்தது. இதனால் காற்று மேலே எழும்பிக் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி, பருவமழைக்காற்று இந்தியாவை நோக்கி முன்கூட்டியே ஈர்க்கப்பட்டுள்ளது என்றும், மேலும், காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு, மேல்மட்ட கிழக்கு திசைக் காற்று கர்நாடகா, கேரளா, மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் முன்கூட்டியே பரவியது. அத்துடன், அந்தமான் கடல் பகுதியில் உருவான சாதகமான காற்றழுத்த தாழ்வு நிலை, முன்கூட்டியே பருவமழை ஏற்பட உந்துதலாக அமைந்துள்ளது. 

பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், கூடுதல் மழை பொழிவு கிடைக்கும் என்று எண்ணினால், அதற்கும் தடையாக அமைந்துள்ளது இந்த தட்பவெப்ப நிலை மாற்றம். பசிபிக் பெருங்கடலில் உருவாகும் 'எல் நினோ' (El Nino) தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு மழைப்பொழிவு இயல்பை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

'எல் நினோ' (El Nino) : இயற்கை பேரழிவின்போது இந்த எல் நினோ என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு எல் நினோ மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு எல் நினோ ஆண்டா?: உலகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை எப்படி இருக்கும் என்ற தகவலை, NOAA எனப்படும் அமெரிக்க அரசின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. எல். நினோ காரணமாக, இந்த ஆண்டு, இந்தியாவில் வெப்ப அலை வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதற்கு காரணம் இந்த ஆண்டு எல் நினோ ஆண்டு என்று கூறுகின்றனர். ஆகஸ்ட் மாத இறுதியில் எல் நினோ தொடங்கும் என்று சொல்லப்பட்ட நிலையில்,  கோடை கால இறுதியிலேயே எல் நினோ தொடங்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  இந்த தகவல் பல நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

எல் நினோ என்றால் என்ன...? நிலப்பரப்பின் வானிலைக்கும், கடலுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருந்து வருகிறது. பசிபிக் கடல் பரப்பில் எப்போதும் இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.  அந்த வகையில், பசிபிக் கடல் பரப்பில் எப்போது வெப்பம் அதிகரிக்கிறதோ அந்த நிலைதான் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.  இந்த எல் நினோ என்ன செய்யும் என்று கேட்டால், இது பருவமழையின் போக்கையே மாற்றி அமைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

எல் நினோ காலம் வந்தால் என்ன நடக்கும்? இந்த எல் நினோ காலக்கட்டத்தில் காற்றின் தீவிரத்தன்மை மாறுபடும். இதனால் புயல்கள் அதிகம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதையே சைக்ளோ ஜெனிசிஸ் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக பூமியின் கோளத்தில் ஒரு பக்கம் தெற்கு அமெரிக்காவும், மறுபுறம் ஆஸ்திரேலியாவும் உள்ளது. இவை இரண்டுக்கும் நடுவே பூமத்திய ரேகை அமைந்துள்ளது. இந்த பூமத்திய ரேகையை ஒட்டி "வியாபார காற்று" எனப்படும் "Trade Winds" வீசும்.  புவிக்கோளத்தில் ஆண்டு முழுவதும் பூமத்திய ரேகையை நோக்கி வீசும் நிலையான காற்றே வியாபார காற்று என்று கூறப்படுகிறது. பண்டைக் காலத்தில் வணிகக் கப்பல்கள் பயணிக்க இந்த காற்று பெரிதும் உதவியாக இருந்ததால், இந்த காற்று தமிழில் வியாபார காற்று என்று  அழைக்கப்படுகிறது. 

இந்த வியாபார காற்று, பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் இருந்து, மேற்கு பகுதியை நோக்கி வீசும். பொதுவாக கடலின் மேற்பரப்பு சற்று வெப்பமாக இருக்கும்.  அப்படி இருக்கையில், கிழக்கு பகுதியில் உள்ள வெப்பக்காற்று முழுவதையும், இந்த வியாபாரக் காற்று, மேற்கு திசையில் குவிக்கிறது. இதனால் மேற்கு திசையில் காற்று சூடாக சூடாக, அங்கு ஒரு குறைந்த அழுத்தம் உருவாகிறது. இந்த குறைந்த அழுத்தம் மூலம் மேகங்கள் மேல் எழும்பி, மழையாக பொழிகிறது. இதைத்தான் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்று கூறுகின்றோம். இது இயற்கையான மழை பொழியும் நிகழ்வு. ஆனால் எல் நினோ காலத்தில் இது மாறுபடுகிறது. எல் நினோ காலத்தில் இந்த வியாபார காற்று நகராமல் அப்படியே நின்றுவிடுகிறது. இதனால் வெப்ப நிலையும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லாமல் நின்று விடுகிறது. 

எனவே வெப்பம் உருவாகாமல், குறைந்த அழுத்தம் ஏற்படாமல், மேகங்கள் உருவாகாமல் மழை பொழிவு ஏற்படாமல் போகிறது. இந்த மாறுபாடுகளால், மழை பெய்யக் கூடிய இடத்தில் மழை பெய்யாமலும், மழை பெய்யக் கூடாத இடத்தில் மழை பெய்வதுமாக  தாறுமாறு ஏற்படுகிறது. இப்படி ஒரு குழப்பமான சூழலை உருவாக்குவதுதான் இந்த "எல் நினோ" என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

எல் நினோ பண்புகள் என்ன...? இந்த எல் நினோவின் பண்புகள் ஒன்று, அதீத மழையைக் கொடுக்கும் அல்லது, அதிகப்படியான வெப்பத்தைக் கொடுக்கும். பருவ நிலையில், எல் நினோ இரண்டு முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை குறைவதால் வறட்சி நிலை உருவாகும். அதே நேரம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை அதிகரித்து கனமழை மற்றும் வெள்ள அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும். தற்போது இந்த காலகட்டத்தில் 60 சதவீதம் வரை வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன், மழை பொழிவு சராசரியை விட குறைய, 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும், சராசரி மழை பொழிவிற்கு வெறும் 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர், வானிலை ஆய்வாளர்கள்.

எப்போதெல்லாம் எல் நினோ உருவாகும்? இந்த எல் நினோ என்பது 2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியில் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு எல் நினோ ஏற்பட்டால், 12-ல் இருந்து 18 மாதங்கள் வரை இந்த நிலை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக லா நினோ நிலையே இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு, எல் நினோ நிலை உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இதற்கு முன் உருவான எல் நினோ: 2009, 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ  ஏற்பட்டிருக்கிறது. இதில் 2015-ல் அதீத மழை பெய்து சென்னையில் வெள்ளம் வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதே நேரம் 2018-ம் ஆண்டு மழை மிக மிக குறைவாகவே இருந்தது. பொதுவாக எல் நினோ காலங்களில் இயல்பை விட மழை பொழிவு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கினாலும், மழை பொழிவு குறைவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை ஏற்படும் என்பதால் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்து மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நீர் இன்றி விவசாயம் பாதிக்கப்படவும், அதனால் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வளிமண்டலத்தில் மேக மூட்டம் குறைவதால் சூரிய கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகின்றன. இதனால் உள்மாவட்டங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, சமவெளிப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டினாலோ அல்லது மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸை தாண்டினாலோ வெப்ப அலை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.வழக்கமாக மே மாதத்தில் உச்சத்தை எட்டும் வெப்பம், தற்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே கடுமையாக உணரப்படுவது கவலை அளிக்கக்கூடிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய கடுமையான மாற்றங்கள் உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு அமைப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பண்புகளால் எப்போதும் மக்களை  அச்சப்படுத்தும் ஒன்றாகவே உள்ளது இந்த எல் நினோ.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.