இந்தியா

தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் மின்சாரத்தை வாங்கவும், விற்கவும் தடை...ஏன் தெரியுமா?

Tamil Selvi Selvakumar

நிலுவைத்தொகை செலுத்தாததன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது...

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்:

தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை மூன்றில் ஒரு பங்கை மட்டும் தமிழக அரசு உற்பத்தி செய்து வருகிறது. மீதமுள்ள இரண்டு பங்குகளை வெளி சந்தையில் இருந்து தமிழகத்திற்கு வாங்கப்படுகிறது. அதாவது, மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம், மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் எனப்படும் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. 

பணம் வழங்காமல் இழுத்தடிப்பு:

இப்படி மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்துவரும் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு டிஸ்காம்ஸ் சார்பில், பணம் வழங்க வேண்டும். ஆனால், தற்போது பல மாநிலங்களில் பணம் செலுத்தாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய  5 ஆயிரத்து 85 கோடி ரூபாயை  தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, பீகார், மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. குறிப்பாக தமிழகம் 926 கோடி ரூபாய்  பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மத்திய அரசு தடை:

இருப்பினும், இந்த நிலுவை தொகையை செலுத்த இரண்டரை மாதங்கள் அவகாசம் வழங்கியும் பணத்தை செலுத்தாதால்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரத்தை வாங்கவும், விற்கவும்  முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அச்சம்:

மத்திய அரசின் தடை காரணமாக, மாநிலங்களுக்கு இடையிலான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.