El Niño India 
இந்தியா

"எல்-நினோவால் ஆட்டம் காணப்போகிறதா இந்தியா?" கிடுகிடுவென உயரும் விலைவாசி - நடுத்தர குடும்பங்களுக்கு காத்திருக்கும் அடுத்த சவால்!

பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய-பசிபிக் பொருளாதாரங்களில் விலையேற்றம் ஏற்பட்டு வருகிறது. எல் நினோவால் ஏற்படும் வானிலை தொடர்பான மாற்றங்களால் உணவு விநியோக பாதிப்புகளால் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாகவும் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே போரினால் உலகளவில் மக்கள் விலைவாசி உயர்வை சந்தித்து வருகின்றனர். அந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்தே மீளமுடியாத நிலையில் உள்ள தருணத்தில் தற்போது விலைவாசி உயர்வு எல் நினோ-வால் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எல் நினோ என்றால் என்ன?: எல் நினோ கடலின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய வெப்பநிலையை விட அதிகமாக வெப்பமானால், அது கடலின் மேற்பரப்பில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி அங்கு ஏற்படக்கூடிய வெப்பமான காற்றை அருகே இருக்கும் நிலப்பரப்பை நோக்கி நகர்த்தும். இதனால் அந்த நிலப்பரப்பில் கடும் வெப்பம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்து அருகே இருக்கும் நிலப்பரப்பிற்கு நகர்த்துகிறது. இது இந்திய கடற்கரை மற்றும் நிலப்பகுதிகளில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கிறது.

எல் நினோ பாதிப்பு: 2026-ல் தொடங்கும் எல் நினோ காலகட்டத்தின் விளைவுகள் என்பது, குறைந்த விவசாய உற்பத்தி, அதிக பணவீக்கம், குறைந்த நீர்மின் உற்பத்தி, மற்றும் காட்டுத்தீ மற்றும் புகைமூட்டம் ஆகியவை இருக்கும் என்று கூறிய நிலையில் உலகளவில் வறட்சி, வெள்ளம், காட்டுத்தீ போன்றவை இந்த ஆண்டு அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பயிரிடுதலுக்காக மழையையே நம்பி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மழை குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புது தில்லி, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் விலையேற்றம் காணப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், எல் நினோவால் மாறும் வானிலை தொடர்பான மாற்றங்களால் சாதாரண நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன என்று எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. தற்போது வலுவான எல் நினோ உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அது நவம்பர் மாதத்தில் இன்னும் உச்சம் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எல் நினோ விளைவானது, 2026-ம் ஆண்டின் பிற்பகுதி முதல் 2027-ம் ஆண்டின் முற்பகுதி வரையிலான, அதாவது ஏப்ரல் மாதம் வரை வானிலையால் ஏற்படும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஜூலை 2026 நிலவரப்படி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான வலுவான உணவு மற்றும் தானிய இருப்புகள் வைத்திருப்பது முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பயிர் இழப்புகளைக் குறைப்பதற்காக, அதிகாரிகள் மாவட்ட அளவில் விவசாயிகளுடன் ஒருங்கிணைப்பை அமல்படுத்தி வருகின்றனர்," என்று எஸ்&பி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த எல் நினோ தாக்கத்தால் உலகளவில் வெப்பநிலை அதிகளவில் உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, தப்பிக்க முன்னேற்பாடுகள் செய்வது என்பது மிகவும் அவசியம். முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவுகள் எல் நினோவால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக, நீரினை சிக்கனமாக உறிஞ்சும் பயிர்களுக்கு மாறுதல், அதிக தானிய இருப்புகளைப் பராமரித்தல் மற்றும் மேம்பட்ட நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகள் போன்றவை கடுமையான எல் நினோ நிகழ்வின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்காக விவசாயத்தையும், மக்கள் விவசாயம் சார்ந்த பொருட்களை நம்பியிருக்கும் நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த எல் நினோ பாதிப்புகளுக்கு மத்தியில் நிலவப்போகும் சீரற்ற தென்மேற்குப் பருவமழை, வேளாண் துறையின் எதிர்காலக் கண்ணோட்டத்திற்கும், கிராமப்புறத் தேவைக்கும் சில ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தெரிவித்திருந்ததுடன், 2027 நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்