பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்த செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் பாஜக மக்களின் ஓட்டுக்களை வீணடிக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சூழ்ச்சி என்ற பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தேர்தல் அறிவித்ததிலிருந்து, மக்கள் நலத்திட்டங்கள் மழை போல பீகாரில் பொழிந்தது.
இந்நிலையில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் அடிப்படையில் வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வௌியாகியது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வௌியிட்ட அறிக்கையில், “பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் ஒருபகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வௌ்ளிக்கிழமை வௌியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார், அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் காகித வடிவிலும், டிஜிட்டல் தரவுகளாகவும் தரப்படும். பீகாரின் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 243 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் பதிவு அதிகாரிகள் ஆகியோரிடம், விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவோ அல்லது தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்கவோ, மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகவோ, எந்தவொரு வாக்காளர்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ ஆகஸ்ட் 1(இன்று) முதல் செப்டம்பர் 1 வரை கோரிக்கைகளை முன்வைக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகீர் கிளப்பிய ராகுல்!
பிகாரில் வாக்காளர்களின் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது. நாங்கள் இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக சொல்லவில்லை. 100% ஆதாரம் எங்களிடம் உள்ளது. வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் மூலம் திருடுவது தேசத்துரோகம். மத்தியபிரதேசம் மக்களவை தேர்தலின்போதே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. மஹாராஷ்டிரா தேர்தலில் எங்கள் சந்தேகம் உறுதியாகி உள்ளது. 6 மாதம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி உள்ளோம். அதில் ஒரு அணுகுண்டு கிடைத்துள்ளது. அது வெடித்தால் தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். பாஜகவுக்கு ஆதரவாக யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை விடமாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.