இந்தியா

14வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. பலத்துடன் உள்ள பாஜக!!

Suaif Arsath

14வது குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் சுலபமாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரான ஜெகதீப் தன்கரும், எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்

ஏற்கெனவே தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.  மாலை 6 மணிவரை நடைபெறும் வாக்குப்பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் 543 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பலத்துடன் உள்ள பாஜக

வெற்றிபெற குறைந்தபட்சம் 395 வாக்குகள் தேவை என்ற சூழலில், பாஜகவுக்கு மட்டும் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்த்து மொத்தம் 394 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து 510க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், இத்தேர்தலில் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து ஜெகதீப் தன்கர் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பார் என்ற நம்பிக்கையுடன் முடிவுகளை எதிர்பார்த்து பாஜகவினர் ஆவலுடன் காத்துள்ளனர்.