இந்தியா

துவங்கியது அவசர கால கொரோனா ஒத்திகை ...தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சொன்னது என்ன?

Tamil Selvi Selvakumar

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை தொடங்கியுள்ளது.

அவசர கால ஒத்திகை:

சீனாவில் தற்போது புதிய வகை கொரோனாவான 'பி.எப்.7' வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், சீனாவில் இருந்து வந்தவர்களால் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இந்த புது வகை தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் இன்று அவசர கால ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இன்று தொடங்கியது கொரோனா தடுப்பு ஒத்திகை:

இதையடுத்து, மத்திய அரசின் அறிவுரைப்படி இன்று காலை 10 மணிக்கு நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை இன்று துவங்கியது. தொடர்ந்து, டெல்லி அரசு மருத்துவமனையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.

12 மணி நேரத்திற்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு:

இதேபோல், ஐதராபாத் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்தான அறிக்கையை 12 மணி நேரத்திற்குள் அந்தந்த மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா: 

அதேபோல் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது கடந்த 20 நாட்களாக பத்துக்கும் கீழாகத் தான் இருந்து வருகிறது எனவும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.