இந்தியா

போர் பதற்றத்தால் நடுக்கடலில் தேக்கமடைந்த ஏற்றுமதி பொருட்கள்.. பாதாளத்திற்கு செல்லுமா இந்திய பொருளாதாரம்?

3.50 கோடி முட்டைகள் துறைமுகங்களிலும், கப்பலிலும் தேக்கமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி..

மாலை முரசு செய்தி குழு

ஈரானில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் சரிவை எதிர்கொண்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவின் இறக்குமதி பாதிக்கபட்டுள்ளது. மேலும் நேற்று இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி தருவதாக வந்த அறிவிப்பை ஈரான் அரசு மறுத்துள்ளது. இந்தியாவின் இறக்குமதி பாதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும். இது இந்தியாவின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் முக்கிய காரணியாகும். அதனை தொடர்ந்து இங்கே எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் ஏற்கனவே இந்த பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் பாதிக்க படும் அபாயம் உள்ளது.

இறக்குமதி தடைபட்டால் இந்தியா எவ்வளவு பாதிப்பை சந்திக்குமோ  அதே அளவு ஏற்றுமதி தடைபட்டாலும் பாதிக்கும். ஏற்றுமதி தடைப்பட்டல் பெரும் பொருளாதார சரிவை இந்தியா சந்திக்க நேரிடும். இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால் இங்கு பலர் விவசாயத்தை மூலாதாரமாக கொண்டுள்ளனர். 
உலகளாவிய வர்த்தக ஆய்வாளர் அஜய் ஸ்ரீவஸ்தவா “ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி தொடரும் உறுதியற்ற தன்மையால், அதன் தாக்கம் இந்தியாவின் விவசாயப் பொருளாதாரத்தில் அலையடிக்க தொடங்கும்”  என்றும்  “இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது சந்தைகளை பன்முகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், வெளிநாட்டு நுகர்வோர்களை அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க நேரிடும்” என்றும் எச்சரிக்கிறார்.

இந்தியாவின் மசாலா ஏற்றுமதிகள் வளைகுடா நாடுகளின் தேவையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. மசாலா ஏற்றுமதியில்  ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய் 70.5 சதவீதம் இந்தப் பகுதிக்கு தான் செல்கிறது. சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற மசாலா விதைகள் ஏற்றுமதி 163 மில்லியன் டாலர் மஞ்சள் மொத்தம் 173 மில்லியன் டாலர்களை எட்டியது, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் இந்தப் பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 23 சதவீதம் இந்தப் பகுதிக்குச் சென்றது. தற்போது ஏற்றுமதி தடைபட்டால் இந்தப் பயிர்கள் முக்கியமாக பயிரிடப்படும் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள விவசாயிகளை பாதிக்கக் கூடியதாக இருக்கும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதிகள் பெரும்பாலும் மேற்கு ஆசிய சந்தைகளை, சார்ந்திருக்கும் நிலையில் இருந்தது. குறிப்பாக அரிசி, வாழைப்பழங்கள், மசாலாப் பொருட்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற பொருட்கள் இந்த ஏற்றுமதில் முக்கியமானவை. மேலும் இந்தியாவின் ஏற்றுமதியில் செம்மறி ஆடு இறைச்சி, மாட்டிறைச்சி, வாழைப்பழங்கள், கொப்பரை மற்றும் சில உணவுப் பொருட்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை மேற்கு ஆசியாவிற்குச் செல்கின்றன. இதனால் வர்த்தக ஓட்டங்கள் தடைபட்டால் ஏற்றுமதி பாதிக்கபடுவது மட்டுமல்லாமல் அதை சார்ந்த விவசாயிகள், தொழிலாளர்களும் பாதிப்படைவார்கள். பால் பொருட்கள், பானங்கள், தேநீர் மற்றும் பல சமையல் எண்ணெய்கள் உள்ளிட்ட பிற பொருட்களும்  அதன் உற்பத்தியாளர்களும் வளைகுடா நாடுகளின்  தேவையை பெரிதும் சார்ந்துள்ளனர். இறக்குமதி போல் இப்போது ஏற்றுமதியாளர்களுக்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி வருகிறது. மேலும் பல இந்திய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் உணவு பதப்படுத்துபவர்களை இது நேரடியாக பாதிக்கலாம் என வர்த்தக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் தமிழகத்தில் நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள் துறைமுகங்களிலும், கப்பலிலும் தேக்கமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1100 க்கும் மேற்பட்ட கோழிப்பண்னைகள் உள்ளது. இங்கு தினமும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் 28 ம் தேதி வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 3.5 கோடி முட்டைகள் அடங்கிய குளிரூட்டப்பட்ட கன்டைனர்கள்  போர் பதற்றத்தால் நடு கடலில் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. மேலும் அதன் காலாவதி தேதிகள் முடிவடைதல் பெரும் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதனை தொடர்ந்து தினமும் உற்பத்தி ஆகும் முட்டைகளும் ஏற்றுமதியால் பாதிக்கக்கூடும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து அரிசி ஏற்றுமதியும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறு பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளை மோசமாகப் பாதிக்கும்.அரிசி ஏற்றுமதி மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொள்கிறது.  2025 ஆம் ஆண்டில் இந்தியா மேற்கு ஆசியாவிற்கு $4.43 பில்லியன் மதிப்புள்ள அரிசியை ஏற்றுமதி செய்தது, இது அதன் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 36.7 சதவீதமாகும். சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகியவை இந்திய பாஸ்மதி அரிசியை அதிகம் வாங்குபவர்களில் அடங்கும் நாடுகள் ஆகும். தொழில்துறை வட்டாரங்களின் செய்தி படி, கிட்டத்தட்ட 4 லட்சம் மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசி தற்போது துறைமுகங்களில் அல்லது போக்குவரத்தில் சிக்கித் தவிக்கிறது.

மேலும் உள்நாட்டு சந்தைகளில் இந்த பொருட்களின் விலையும் குறையும் இதனால் விவசாயிகளும், சிறு குறு தொழில் செய்பவர்களும் பாதிக்க நேரிடும். உள்நாட்டு சந்தையில் நிர்ணயிக்க பட்ட பொருள்களின் மதிப்பு குறையும் பட்சத்தில் தொழில் துறையில் பொருளாதாரம்  சரியக்கூடும். முன்னதாக பங்குசந்தையில் ஏற்படும் தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். அதே போல் உள்நாட்டு சந்தையிலும் தொழிலாளர்கள் வெளியேறும்  அபாயம் உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.