இந்தியா

குடும்ப அரசியல் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்... பிரதமர் மோடி அதிரடி பேச்சு...

அரசியல் கட்சிகளின் குடும்ப அரசியலே இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

இந்திய அரசியல் சாசனத்தை, 1949 ஆம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொறு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் சாசன சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தினத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் நாடாளுமன்ற மைய பகுதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளன. 

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ன் தொடக்க உரையை தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது மும்பை தீவிரவாத தாக்குதலின் 13 ஆம் நினைவு தினத்தையொட்டி பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக கூறினார். 

நாட்டின் பன்முகதன்மையை பிணைக்கும் நோக்கில் இந்திய ஆரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டில் பிரிந்து கிடந்த பல சமஸ்தான்ங்களை ஒன்றிணைத்து பல இடையூறுகளுக்கும் பிறகு அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்திய ஜனநாயகத்திற்கு குடும்ப அரசியலே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக கவலை தெரிவித்த அவர், அரசியல் சாசன சட்ட தினத்தை புறக்கணித்துள்ள எதிர்கட்சிகள் தேசத்தை காட்டிலும் தங்கள் குடும்பத்தையே முதன்மையாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.