இந்தியா

சோகத்தில் மூழ்கிய மோகன்லால்! 90 வயதில் தாயார் காலமானார் - திரையுலகமே கண்ணீர் மல்க அஞ்சலி!

அன்னையர் தினத்தன்றும் தனது தாயுடனான சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் தனது பாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்...

மாலை முரசு செய்தி குழு

மலையாளத் திரையுலகின் 'லெஜண்ட்' என்று அழைக்கப்படும் நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, இன்று செவ்வாய்க்கிழமை மதியம் கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 90. நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இந்தத் துயரச் செய்தி கேட்டவுடன் கொச்சியில் இருந்த மோகன்லால், உடனடியாக தனது இல்லத்திற்கு விரைந்தார்.

சாந்தகுமாரி அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தின் எலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் விஸ்வநாதன் நாயர், கேரள அரசின் சட்டச் செயலாளராகப் பணியாற்றியவர். கணவரின் பணி நிமித்தமாகப் பல ஆண்டுகளுக்கு முன்பே திருவனந்தபுரத்திற்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். வாழ்வின் பெரும்பகுதியைத் திருவனந்தபுரத்திலேயே கழித்த சாந்தகுமாரி, பக்கவாதம் ஏற்பட்ட பிறகு மோகன்லாலின் பராமரிப்பிற்காகக் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.

மோகன்லால் தனது தாயார் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர் என்பதைப் பலமுறை மேடைகளில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவரது 90-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது பெற்றுத் திரும்பியபோது, மோகன்லால் முதன்முதலில் சந்தித்து ஆசி பெற்றது தனது தாயாரிடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னையர் தினத்தன்றும் தனது தாயுடனான சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் தனது பாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சாந்தகுமாரிக்கு மோகன்லால் என்ற ஒரு மகன் மட்டுமே தற்போது உள்ளார். இவரது மூத்த மகன் பியாரேலால் கடந்த 2000-ம் ஆண்டே உயிரிழந்தார். சாந்தகுமாரியின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக இன்று மாலை திருவனந்தபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லாலின் தாயார் மறைவுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.