இந்தியா

ஜி7 மாநாடு தொடர்ந்து அபுதாபி சென்ற பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார் !!

ஜி7 மாநாட்டைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

Suaif Arsath

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி, ஜப்பான்) தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஜெர்மனியில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து, மாநாட்டில் காலநிலை, எரிசக்தி, சுகாதாரம் குறித்தும், பாலின சமத்துவம் பற்றியும் மோடி உரையாற்றினார். 

இந்த நிலையில், ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்த பிரதமர், அங்கிருந்து ஐக்கிய அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை, அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் ஆரத்தழுவி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற சந்திப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவிற்கு, மோடி இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து விமானநிலையம் சென்ற அவர், அபுதாபிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.