கங்கா தசராவை முன்னிட்டு உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் புனித நீராடலில் ஈடுபட்டதால், இது கொரோனாவின் 3-வது அலைக்கு வழியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வட மாநிலங்களில் ஆண்டுதோறும் கங்கா தசரா திருவிழாவையொட்டி, மக்கள் புனித நீராடி கொண்டாடுவது வாக்கம். அதன்படி இந்த ஆண்டும் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கா தசரா திருவிழா களைகட்டியது.
இதனையொட்டி கங்கை நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள், ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.
உத்தரகாண்டில் சமூக இடைவெளியை மறந்த மக்கள் புனித நீராடலில் ஈடுபட்டனர். வீடுகளிலேயே புனித நீராடும்படி மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர். சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களை மட்டுமே புனித நீராட அனுமதிப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா 3ஆவது அலை இந்தியாவை பாதிக்க கூடிய சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ள சூழலில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடிய வகையில், விதிகளை மீறி மக்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.