இந்தியா

ரஜினி முதல் பிரதமர் வரை... மகேஷ் பாபுவிற்கு அனுதாபம் தெரிவித்த பிரபலங்கள்...

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரனா மகேஷ் பாபு, தனது தந்தையை இழந்ததை அடுத்து, அவருக்கு திரைபிரபலங்கள் தங்களது வருத்தஙளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

பிரபல தென்னிந்திய திரையுலகின் அப்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்றால், அது “கிருஷ்ணா” தான். தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட போது, இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகராக சுமார் 4 தசாப்தங்கள் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார்.

அது மட்டுமின்றி, மக்களிடம் இருக்கும் தனது செல்வாக்கை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ள, அரசியலில் குதித்து, காங்கிரஸ் கட்சி மூலமாக பல மக்கள் நலன் தரும் செயல்கள் செய்திருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் கிருஷ்ணாவின் முழு  பெயர் கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி. இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததை அடுத்து, பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், ஒரே ஆண்டில், தனது முழு குடும்பத்தையும் இழந்த மகேஷ் பாபுவிற்கு தான் அனைவரும் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி, தனது சகோதரர் “ரமேஷ் பாபு”, கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி தனது தாய் இந்திரா தேவி, மற்றும் தற்போது தனது தந்தை சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாகாரு ஆகிய அனைவருமே இந்த ஆண்டிலேயே இழந்ததால், மகேஷ் பாபுவுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கிறது என சக திரைப்பிரபலங்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், கார்த்தி, சூரியா, சிம்ரன், விஷால், கீர்த்தி சுரேஷ், சமந்தா, மம்மூட்டி, ஷர்வானந்த், ஹரிஷ் கல்யாண், நானி. ராதிகா சரத்குமார், அனுஷ்கா ஷெட்டி, பிரபாஸ், விவேக் ஓபராய் உட்பட பல பெரும் நட்சத்திரங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பின், இசையமைப்பாளர்கள், தேவிஸ்ரீ பிரசாத், எஸ் தமன் போன்றோரும் தங்களது இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

மேலும், பிரபாஸ், விஜய் தேவர்கொண்டா, பவன் கல்யாண் போன்ற பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் தங்களது அஞ்சலியை நேரில் வந்து செலுத்தினர். இந்த நேரத்தில், மகேஷ் பாபு அப்படியே மனமுடைந்து காணப்படுகிறார்.

ஒரே ஆண்டில் தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்த மகேஷ் பாபு, கண்கலங்கி ஓரமாக அமர்ந்திருப்பது கவலையளிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், பல காங்கிரஸ் கட்சியினரும் தங்களது வருத்தங்களைப் பதிவிட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது இரங்கலையும் தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டரில் தெலுங்கு மொழியிலேயே பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவில்,

கிருஷ்ணா அவர்கள், தனது அற்புத நடிப்பாற்றல் மற்றும் உன்னதமான, ஸ்நேகபூர்வமான தன்மைக் கொண்டு மக்களின் இதயங்களை வென்ற ஒரு லெஜெண்டரி சூப்பர் ஸ்டார். அவரது மறைவு சினிமா உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. இந்த சோககர நேரத்தில் மகேஷ் பாபு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.

இதனைத் தொடர்ந்து, அவரது நிலையைக் கண்டு ரசிகர்கள் கண்கலங்கி பதிவுகளைப் போட்டு தங்களது அனுதாபங்களை மகேஷ் பாபுவுக்கு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா அவர்களின் ஈம சடங்கில் இருந்து போட்டோக்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.