இந்தியா

முதலமைச்சர்கள், ஆளுநர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் மோடி!

Tamil Selvi Selvakumar

ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது நமது நாட்டின் வலிமையை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காணொளி வாயிலாக கலந்துரையாடல்:

இந்தியாவின் ஜி 20 தலைமையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது கூட்டுப்பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது நமது நாட்டின் வலிமையை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு என்று கூறிய அவர், ஜி20 தலைமை இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர்த்து பிற பகுதிகளின் தனித்துவங்கள் வெளிச்சத்திற்கு வர உதவிகரமாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், ஜி20 உச்சி மாநாட்டின் போது பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்களும் வரவிருப்பதால் மாநிலங்கள் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் ஜி 20 கூட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.