இந்தியாவில் மருத்துவச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் கையிலிருந்து செலவிடும் தொகையின் பங்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில், சுகாதாரத் துறையில் அரசின் செலவினம் அதிகரித்துள்ளது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த மாற்றம் உண்மையான நிவாரணமாக மாறிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளின் செலவுகள், காப்பீட்டின் பயன்பாடு, அரசு சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதி ஆகியவற்றைப் பார்க்கும்போது, இந்திய மருத்துவக் கட்டமைப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய பல விஷயங்கள் இருப்பது தெரிகிறது.
இந்தியாவின் சுகாதாரச் செலவுகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 2023-24ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரக் கணக்கீட்டு அறிக்கை பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 2023-24ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த சுகாதாரச் செலவு ரூ.9.52 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இதில் அரசு செலவிடும் தொகை மட்டுமல்லாமல், தனியார் மருத்துவக் காப்பீடு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகச் செலுத்தும் மருத்துவச் செலவுகளும் அடங்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காகச் செலவிடப்படும் தொகையின் பங்கு 3.29 சதவீதமாக உள்ளது.
இந்த அறிக்கையில் கவனிக்க வேண்டிய முக்கியமான மாற்றம், மருத்துவச் செலவில் அரசின் பங்கு அதிகரித்திருப்பதுதான். 2013-14ஆம் ஆண்டில் மொத்த சுகாதாரச் செலவில் அரசின் பங்கு 28.6 சதவீதமாக இருந்தது. ஆனால், 2023-24ஆம் ஆண்டில் இது 43.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, நாட்டின் மருத்துவச் செலவுகளில் அரசு வழங்கும் நிதியின் பங்களிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2013-14ஆம் ஆண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்த அரசின் சுகாதாரச் செலவு, 2023-24ஆம் ஆண்டில் ரூ.4.14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து மருத்துவத்திற்குச் செலவிடும் தொகையின் பங்கு குறைந்திருப்பதாகும். 2013-14ஆம் ஆண்டில் மொத்த மருத்துவச் செலவில் மக்களின் நேரடிச் செலவு 64.2 சதவீதமாக இருந்தது. 2023-24ஆம் ஆண்டில் இது 42.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, பத்து ஆண்டுகளில் 21.5 சதவீதப் புள்ளிகள் அளவுக்கு இந்தப் பங்கு சரிந்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் 43.4 சதவீதமாக இருந்த இந்த அளவு, அடுத்த ஆண்டில் மேலும் குறைந்துள்ளது.
இந்தக் குறைவு என்பது மக்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் மொத்தப் பணமும் அதே அளவில் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. 2023-24ஆம் ஆண்டில் மட்டும் இந்தியக் குடும்பங்கள் தங்கள் கையிலிருந்து சுமார் ரூ.4.06 லட்சம் கோடியை மருத்துவத்திற்காகச் செலவிட்டுள்ளன. இது மிகப்பெரிய தொகையாகும். அதாவது, அரசின் பங்களிப்பு அதிகரித்திருந்தாலும், நோய் ஏற்பட்டால் குடும்பங்கள் தங்கள் சேமிப்பிலிருந்து கணிசமான தொகையைச் செலவிட வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது.
மருத்துவச் செலவுகள் அதிகரித்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதாரத்திற்கான முதலீடு உயரவில்லை என்பதும் அறிக்கையில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. 2023-24ஆம் ஆண்டில் ஒருவருக்கு சராசரியாக ரூ.6,801 மருத்துவச் செலவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்தத் தொகை ரூ.6,373 மற்றும் ரூ.6,602 ஆக இருந்தது. ஒருவருக்கான செலவு அதிகரித்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது சுகாதாரச் செலவின் பங்கு குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலமான 2021-22ஆம் ஆண்டில் மொத்த சுகாதாரச் செலவு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக இருந்தது. 2023-24ஆம் ஆண்டில் அது 3.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அரசின் சுகாதாரக் கொள்கையிலும் இதற்கான இலக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கையின்படி, 2025ஆம் ஆண்டுக்குள் அரசின் சுகாதாரச் செலவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், 2023-24ஆம் ஆண்டில் அரசின் சுகாதாரச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.43 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. எனவே, அரசின் செலவு அதிகரித்திருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் இன்னும் இடைவெளி இருப்பது தெளிவாகிறது.
மருத்துவக் காப்பீட்டின் பங்களிப்பும் இந்தக் காலகட்டத்தில் உயர்ந்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் மொத்த சுகாதாரச் செலவில் தனியார் மருத்துவக் காப்பீட்டின் பங்கு 7 சதவீதமாக இருந்தது. 2023-24ஆம் ஆண்டில் இது 10.2 சதவீதத்தைக் கடந்துள்ளது. அதேபோல், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்கள் வழியாக வழங்கப்படும் சமூகப் பாதுகாப்புச் செலவுகளின் பங்கு 9.3 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசு சார்ந்த மருத்துவ உதவித் திட்டங்களும் காப்பீட்டு வசதிகளும் சுகாதாரச் செலவுகளைப் பகிர்ந்து கொள்வதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
மற்றொரு கவலைக்குரிய அம்சம், தனியார் மருத்துவமனைகளை மக்கள் அதிகம் நாடுவதுதான். அரசு மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது, தனியார் பொது மருத்துவமனைகளில் மக்கள் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகச் செலவிடுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மொத்த நடப்பு சுகாதாரச் செலவில் தனியார் மருத்துவச் சேவை நிறுவனங்களின் பங்கு 31.8 சதவீதமாக உள்ளது. இதனால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தனியார் மருத்துவச் செலவுகள் தொடர்ந்து சுமையாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் மருத்துவச் செலவுகளை அரசு அதிகமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதும், மக்களின் நேரடிச் செலவின் பங்கு குறைந்திருப்பதும் நல்ல மாற்றங்களாகும். ஆனால், மருத்துவச் செலவின் பெரும்பகுதியை இன்னும் குடும்பங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளின் தரம், மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகளின் கிடைப்புத்தன்மை, குறைந்த விலையில் மருந்துகள், பரிசோதனை வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டால்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் மக்களின் வாழ்க்கையில் உண்மையான நிம்மதியாக மாறும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.