இந்தியா

மகளிருக்கு உதவும் மகத்தான திட்டங்கள்.. ஒன்றிய அரசின் "லக்பதி திதி யோஜனா முதல் ஸ்டாண்ட் அப் இந்தியா வரை… மகளிர் தின “EXCLUSIVE”!

கடன் தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கப்படும், அதற்கான கால அவகாசம் 7 ஆண்டுகள் வரை.......

மாலை முரசு செய்தி குழு

ஒன்றிய, மாநில அரசுகள் பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் பெண்களுக்கு அவர்களின் பொருளாதார மற்றும் சுகாதார நலன்களுக்கான மிக முக்கியமான திட்டங்கள் ஆகும். இத்திட்டம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம். 

லக்பதி திதி யோஜனா: மகளிர்களுக்கான 'லக்பதி திதி யோஜனா' திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் வாயிலாக மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதனால் வட்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை.SHG (மகளிர் சுய உதவி குழு) களின் உதவியுடன் லக்பதி திதி யோஜனா திட்டத்தின் பலனை பெற முடியும். இது பெண்கள் சுயதொழில் தொடங்க உதவியாக இருக்கும் முக்கிய திட்டமாகும்.

மிஷன் இந்திரதனுஷ்: இந்த திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி திட்டமாகும். டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், போலியோ, காசநோய், தட்டம்மை, மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற  7 முக்கிய நோய்களுக்கு  தடுப்பூசி போடுதல். இத்திட்டத்தின் நோக்கம் தடுப்பூசி செலுத்தி தடுக்க கூடிய நோய்களை தடுப்பது, சுகாதார அமைப்புகள் வலுப்படுத்தி, குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகும். தாய் சேய் இருவருக்கும் 90% நோய்த்தடுப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.

TREAD திட்டம்: இத்திட்டம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசின் ஒரு முயற்சியாகும். இது சுயதொழில் புரியும் பெண்களுக்கு, வங்கிக் கடன் உதவியுடன், திட்ட மதிப்பீட்டில் 30% வரை மானியமாகவும், 70% வரை கடனாகவும் வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் பெண்களுக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப பயிற்சியும் அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மூலம் வங்கிகள் வழியாக நிதி உதவி வழங்கப்படுகிறது. ஏழை மற்றும் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் TREAD திட்டத்தின் முக்கிய இலக்காகும். இத்திட்டம் பெண்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும், அவர்கள் ஒரு நிலையான தொழிலதிபராக மாற்ற உதவுகிறது. 

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY): இத்திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு, புகை இல்லாத சுத்தமான சமையல் எரிவாயுவை (LPG) இலவசமாக வழங்க, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மை திட்டமாகும். இந்த திட்டத்தின்  கீழ், பெண்களுக்கு ₹1,600 நிதியுதவி மற்றும் சமையல் அடுப்பு, முதல் சிலிண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. 

ஸ்டாண்ட் அப் இந்தியா: 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கிய இத்திட்டம்,  பெண்கள் மற்றும் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது . இது உற்பத்தி, சேவை, வணிகம் போன்ற துறைகளில் பின்தங்கிய பெண்களின் புதிய முயற்சிகளுக்கு நிதி ஆதரவாக அமைகிறது. கடன் தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கப்படும், அதற்கான கால அவகாசம் 7 ஆண்டுகள் வரை இருக்கும். இந்த திட்டத்தின்  கீழ் நிதியுதவி மட்டுமல்லாமல், வழிகாட்டுதலும் வழங்குவைத்தான் மூலம் சிறு, நடுத்தர தொழில்கள் பெண்கள் முன்னேறும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

Helpline: பெண்களுக்கு ஏற்படும் வன்முறை அல்லது வேறு ஏதேனும் இடையூறுகளை தடுக்க இதுவும் திட்டமாகும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசர உதவி வழங்க, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த helpline 24x7 உதவி மையம் இயக்கப்படுகிறது.

STEP: இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு அரசாங்கத் திட்டமாகும், இது பெண்களுக்கான பயிற்சித் திட்டங்களை நடத்தும் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு பெறுவது அதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதே நோக்கமாகும். 16 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு உதவும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இது விவசாயம், கைத்தறி, தையல், கணினி மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து, பெண்களைத் தொழிலதிபர்களாக மாற்ற உதவுகிறது.

மஹிலா இ-ஹாட்: இது பெண்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு இணையதள சந்தையாகும். வாடிக்கையாளர்களை ஈர்க்க அவர்கள் சரியான தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் புகைப்படங்களையும் சேர்க்கலாம். இது பெண்களுக்கு தொழில் துறையில்  அதிகாரமளிப்ப உறுதி செய்யும் அதே வேளையில் மேக் இன் இந்தியா ஊக்குவிக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல், தயாரிப்பாளர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு பொருட்கள் விற்க உதவுகிறது.

மஹிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ்: பெண்களுக்கான மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டமாகும். இது 2 ஆண்டுகளுக்கு 7.5% நிலையான வட்டி விகிதத்துடன், அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கிறது. தபால் நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் சார்பாக பெற்றோர்கள் இக்கணக்கை தொடங்கலாம்.

மகிளா சக்தி கேந்திரா (MSK) திட்டம்: இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, அவர்களின் சட்ட உரிமைகள், சுகாதாரம் மற்றும் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல். முக்கியமாக கிராமப்புற பெண்கள், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் இத்திட்டம் ஒரு விழிப்புணர்வு திட்டமாக இருக்கும். அதன் படி பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, டிஜிட்டல் கல்வியறிவு, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய ஆலோசனை, மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு வழங்கப்படும்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.