இந்தியா

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூட்டம்...! சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்...!

Malaimurasu Seithigal TV

கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்தின் துவக்க நாளில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், படிபூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் மட்டுமே கோவில் திறக்கப்பட்டு இந்த பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கோவில் நீண்ட நாட்களாக திறக்கப்பட்டு இருக்கும்.

இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்வர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவிலான ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் குறைந்தது 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகிறார்கள், அதே போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வேறு ஒரு வழி என கேரள போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர். விரைவில் சுவாமியை தரிசனம் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்தால் பக்தர்கள் எளிதில் வீடு திரும்புவதற்கு ஏதுவாக இருக்கும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.