இந்தியா

“பெண்களை பண்டமாற்ற பொருளாக்கும் திருமணம்” – ‘ஆட்டா-சாட்டா’ முறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்! சிறுமிகளையும் விட்டு வைக்காத கொடூரம்?

தங்கையான சிறுமி சாக்சி என்பவரை , அந்த பெண்ணின் சகோதரருக்கு திருமணம் செய்து வைக்க

Muthu Lakshmi

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், பிகானேர் குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, ஒரு பெண்ணுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது. திருமண வாழ்க்கை தொடர்பான கொடுமை வழக்குகளில், குற்றவியல் வழக்குகளைப் போல “சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில்” நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் அருண் மொங்கா மற்றும் சுனில் பேனிவால் அடங்கிய அமர்வு, திருமணத் தகராறுகள் “சாத்தியக்கூறுகளின் அடிப்படையில்” தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவியல் வழக்குகளுக்கான கடுமையான ஆதார விதிமுறைகள் இதில் பொருந்தாது என்றும் கூறியது.

இந்த வழக்கில், “ஆட்டா-சாட்டா” (Aata-Sata) என்ற பழமையான திருமண முறையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இந்த முறையை “சட்டரீதியாகவும், நெறிமுறையிலும் முற்றிலும் தவறானது” என்றும், “மனித வாழ்க்கையை பண்டமாற்ற பொருளாக மாற்றும் மனிதத்தன்மையற்ற முறை” என்றும் குறிப்பிட்டது. ராஜஸ்தானில் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்த “ஆட்டா-சாட்டா” முறையில், இரண்டு குடும்பங்கள் தங்களது மகள்களை ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொடுப்பார்கள். சில நேரங்களில் சிறுமிகளும் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

இந்த வழக்கில், பெண் மனுதாரர் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2016 மார்ச் 31 அன்று இந்து முறைப்படி ரிதேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை  திருமணம் செய்துகொண்டார். அதே நாளில், “ஆட்டா-சாட்டா” முறையின்படி, அவரது கணவரின் தங்கையான சிறுமி சாக்சி என்பவரை , அந்த பெண்ணின் சகோதரருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், வயது வந்த பிறகு சாக்சி தனது குழந்தை திருமணத்தை ஏற்க மறுத்ததால், இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த குடும்ப தகராறுக்கு பழிவாங்கும் விதமாக ரிதேஷ் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி உள்ளார். இதனால் கணவர் மற்றும் மாமனார் தன்னை வரதட்சணை கேட்டு உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும், 2020 மார்ச் 19 அன்று தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சவிதா குற்றம்சாட்டினார். 

இதையடுத்து, சவிதா கணவர் மற்றும் மாமனாருக்கு எதிராக வரதட்சணை கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் FIR பதிவு செய்தார். போலீசார் பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். மறுபுறம், கணவர் தரப்பு, தனது தங்கை திருமணத்தை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் தான் இந்த வழக்குகள் தொடரப்பட்டதாக கூறி, சவிதாவின் தந்தை மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சூழலில், அந்த பெண் பிகானேர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் 2025 செப்டம்பர் 24 அன்று குடும்ப நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மனைவி தானாகவே வீட்டை விட்டு சென்றதாகவும், கணவரின் தங்கை திருமணத்தை மறுத்ததால் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கவே குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறி அவர்களுக்கு விவாகரத்து கொடுக்க மறுத்தது.

இதனால் பாதிக்கப்பட்ட சவிதா உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கறிஞர், வரதட்சணை தொடர்பான தொடர்ச்சியான மன மற்றும் உடல் கொடுமைகளை அவர் சந்தித்ததாக வாதிட்டார். ஆனால் கணவர் தரப்பு, பிரச்சினைக்கு காரணம் தனது தங்கை திருமணத்தை ஏற்க மறுத்ததே என கூறியது. இதனை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம், “ஆட்டா-சாட்டா” தொடர்பான குடும்ப பிரச்சினையையும், கணவன்-மனைவி இடையேயான திருமண கொடுமையையும் ஒன்றாகக் கலக்கி பார்த்து குடும்ப நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது என்று தெரிவித்தது.

விசாரணையின் போது, “மன அமைதிக்காக திருமணத்தை முடிக்க விரும்புகிறேன்; கடந்தகால, நிகழ்கால அல்லது எதிர்கால பராமரிப்பு தொகை எதையும் கோரவில்லை” என்று பெண் தரப்பு தெரிவித்தது. அதை பதிவு செய்த நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கியது. மேலும், இந்த விவாகரத்து உத்தரவு, இரு தரப்புகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளுக்கும் அல்லது குழந்தை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும், அவை தனித்தனியாக சட்டப்படி தொடரும் என்றும் நீதிமன்றம் விளக்கியது.

2006ஆம் ஆண்டின் குழந்தை திருமணத் தடுப்பு சட்டத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், “ஆட்டா-சாட்டா” போன்ற முறைகள் சிறுமிகளை “திருமண பரிமாற்றப் பொருளாக” மாற்றுகின்றன என்று கடுமையாக சாடியது. மேலும், “ஒரு பெண்ணின் வாழ்க்கையும் சுதந்திரமும் மற்றொரு பெண்ணின் கீழ்ப்படிதலின் மீது அமையும் நிலை இது. இது திருமண பிணைக்கைதி முறையைப் போன்றது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. “சட்டத்தை விட எந்த பழக்கமும் உயர்ந்ததல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.