குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த சம்பவம், நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு தாபாவில் பணிபுரிந்த ஊழியரை, கத்தியைக் காட்டி மிரட்டி, மற்றொருவர் தன் கால்களை நக்குமாறு கட்டாயப்படுத்திய கொடூரக் காணொளிக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதத்தன்மையற்ற செயலைச் செய்தவரை 'போலா பாய்' என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த 26 வயது இளைஞர், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிழைப்புக்காகச் சூரத்துக்கு வந்த அவர், இங்குள்ள ஒரு தாபாவில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும், அந்தக் குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையால்தான் இந்தக் கொடூரமான தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது.
வெளியான காணொளியில், "போலா பாய், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி சூரத்துக்கே வரமாட்டேன்," என்று அந்த இளைஞர் பயந்து நடுங்கி கெஞ்சுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. மிரட்டிய நபர், அவரது தொண்டையில் கத்தியை வைத்துக்கொண்டே இந்த அநியாயத்தைச் செய்துள்ளார். மேலும், இளைஞரை பலமுறை அறைந்தும், வலி தாங்காமல் அலறிய போதும், தன்னுடைய கால்களை நக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இந்தக் கொடூரத்தை, அந்தப் பாவி, இளைஞரின் முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு செய்திருக்கிறார். இந்த அநியாயச் செயலை, அவர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தங்கள் கைபேசியில் முழுவதுமாகப் பதிவு செய்துள்ளனர்.
இந்தக் காணொளிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவிய பிறகு, பாதிக்கப்பட்ட இளைஞர் திடீரென காணாமல் போனார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் புனேயில் உள்ள ஒரு நண்பரைப் பார்க்கப் போவதாக முதலாளியிடம் சொல்லிவிட்டுப் போனவர், அதன்பிறகு அவருடைய கைபேசியும் அணைக்கப்பட்டுவிட்டது.
காணொளிகள் அவருடைய சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்குப் போய்ச் சேர்ந்தது. தங்கள் மகனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ என்று பயந்த குடும்பத்தினர், சித்தி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில், தன் மகனைத் திரும்பக் கண்டுபிடித்துத் தருமாறு உடனடியாகப் புகார் கொடுத்தனர். அந்த இளைஞர்தான் அந்தக் குடும்பத்தின் ஒரே வருமானம் என்பதால், குடும்பத்தினர் பெரும் பதற்றத்தில் இருந்தனர்.
நல்ல வேளையாக, மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டு, அந்த இளைஞர் புனேயில் இருப்பதை விரைவாகக் கண்டுபிடித்தது. தனக்கு நேர்ந்த பயங்கர சம்பவத்தால் மிகவும் பயந்துபோன அவர், ஒரு நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. தற்போது, அவரை பத்திரமாகத் தாய் மாநிலத்துக்குத் திரும்பக் அழைத்து வந்துள்ளனர்.
இந்த மிரட்டல் மற்றும் அவமானச் சம்பவம் குறித்து இப்போது தீவிரமான விசாரணை நடத்தப்பட உள்ளது. அந்த இளைஞரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னரே, இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்ட 'போலா பாய்' மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.