இந்தியா

மீண்டும் மீண்டும் அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சியினர்...!

Tamil Selvi Selvakumar

அதானி குழும முறைகேடு தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் றாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எல்.ஐ.சி., மற்றும் எஸ்.பி.ஐ. வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 12 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.


இதேபோல், மாநிலங்களவை கூடியதும் மாநிலங்களவைத் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் நிலநடுக்கத்தில் சிக்கி கடும் பாதிப்புக்கு உள்ளான துருக்கியில் உயிரிழந்தவர்களுக்காக சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர்,அவையை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.