இந்தியா

போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்திய கப்பல்கள் எப்படி பயணிக்கின்றன? இந்தியாவின் 'சீக்ரெட்' பிளான் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கொடியுடன் சுமார் 13 கப்பல்கள் உள்ளன

மாலை முரசு செய்தி குழு

பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் போரில் நுழைந்ததிலிருந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதி முடக்கப்பட்டுள்ளது. உலகின் மொத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 20 சதவீதம் இந்த குறுகிய பாதை வழியாகவே செல்கிறது. ஏப்ரல் 9-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும், இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இருப்பினும், இந்த கடுமையான சூழலிலும் இந்தியக் கப்பல்கள் தொடர்ந்து இந்தப் பாதை வழியாகப் பயணித்து வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வரும் ரகசிய ஒருங்கிணைப்புதான் இதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்திற்காக, மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் உரத்துறை அமைச்சகங்களுடன் இணைந்து எந்தெந்த கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது ரகசியமாகத் தீர்மானிக்கப்படுகிறது. செயல்முறை விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்றாலும், இந்த ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலமே கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முடிகிறது என்று கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குனர் ஓபேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கொடியுடன் சுமார் 13 கப்பல்கள் உள்ளன. இதில் எல்.பி.ஜி டேங்கர்கள், கச்சா எண்ணெய் கப்பல்கள், கொள்கலன் கப்பல்கள் என பல்வேறு வகையான கப்பல்கள் அடங்கும். பல உலகளாவிய கப்பல் நிறுவனங்கள் போர் பயம் காரணமாக இந்தப் பாதையைத் தவிர்த்து வரும் சூழலில், இந்தியா தொடர்ந்து தனது கடல்வழிப் போக்குவரத்தைப் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஷிவாலிக், நந்தா தேவி மற்றும் ஜக் லாட்கி உள்ளிட்ட பல கப்பல்கள் ஏற்கனவே இந்தப் பாதை வழியாகப் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.

பொதுவெளியில் கிடைக்கும் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் (Ship tracking data) பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்ற கேள்விக்கு, இது ஒரு வணிக ரீதியான பயன்பாடு என்றும், தற்போதைய நிலையில் இந்தத் தரவுகள் கப்பல்களைக் கண்காணிக்கத் தங்களுக்கு உதவியாகவே இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு தகவலை எப்படிப் பயன்படுத்துவது என்பது அந்த நபரின் நோக்கத்தைப் பொறுத்தது என்றும், ஹார்முஸ் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலில், இந்தியாவின் இந்த ராஜதந்திர மற்றும் நிர்வாக ரீதியான நகர்வுகள் எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பின்றி வைத்திருக்க உதவுகின்றன என்று கருதப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்