இந்தியா

“ஜப்பான் மற்றும் சீனா வரிசையில் தடம் பதித்த இந்தியா” - முதல் முறையாக அறிமுகமாகும் ஹைட்ரஜன் ரயில்.. இனி எரிபொருள் அவசியமில்லை!

நீராவி மற்றும் வெப்பம் மட்டுமே வெளியேறும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது

Muthu Lakshmi

இந்திய ரயில்வே தனது முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ஒப்புதல் நாட்டில் தூய்மையான மற்றும் பசுமையான ரயில் பயணத்தை உருவாக்கும் ஒரு படியாக பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், ஹைட்ரஜன் ஆற்றலால் இயங்கும் இரயில் அமைப்புகளை உருவாக்குவதில் ஏற்கனவே தீவிரமாக செயல்பட்டு வரும்  ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா  ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வப் பக்கம், ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் குறித்து  சிறப்பு காணொளி ஒன்றைப் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது, எந்தப் புகையையும் வெளியிடாமல், நீராவியை மட்டுமே உருவாக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பத்து பெட்டிகளை உள்ளடக்கியது, அதில் எட்டு பெட்டிகள் மட்டுமே பயணிகள் பயணம் செல்லும் பெட்டிகள் மீதமுள்ள இரண்டும் மின்சாரப் பெட்டிகள். மேலும் இது 1,200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசையால் உயங்குமாம். இது மணிக்கு 75 கி.மீ. வரையிலான வணிக வேகத்தில் இயங்கும், இருப்பினும் சோதனையின் போது மணிக்கு 120 கி.மீ. வரையிலான வேகத்தில் இயக்கப்படும். ரயிலுக்குள் ஹைட்ரஜன் சேமிப்பு சிலிண்டர்கள், எரிபொருள் மின்கல அமைப்புகள், மின்கலத் தொகுப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வைப்பதற்காக பிரத்யேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஹைட்ரஜன் ரயிலில், டீசல் மற்றும் இதர எரிபொருள்கள் இன்றி தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயிலில் சுற்று சூழலுக்கு பதிப்பை ஏற்படுத்தும் புகை எதுவும் வெளியேறாது. நீராவி மற்றும் வெப்பம் மட்டுமே வெளியேறும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஒரு முறை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பினால் சுமார் 250 கி.மீ வரை இயங்கும். 

இந்த ரயில், ஹைட்ரஜன் எரிபொருள்-கல அமைப்பாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு டீசல்-மின்சார பல்லுறுப்பு ரயில் (DEMU) ஆகும். இது எரிபொருளை எரிப்பதற்குப் பதிலாக, ஹைட்ரஜனுக்கும் ஆக்ஸிஜனுக்கும் இடையேயான ஒரு வேதிவினை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அந்த மின்சாரம், ஒரு மின்சார ரயிலைப் போலவே, மேல்நிலை கம்பிகள் அல்லது டீசல் எரிப்பு இல்லாமல் இழுவை மோட்டார்களை இயக்குகிறது. அறிமுகப்படுத்தவுள்ள ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல ரயில்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாகக் கருதப்படுகின்றன. இந்த ரயில்கள் இயங்கும்போது நேரடியாக புகை அல்லது கார்பன் உமிழ்வை வெளியிடாது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, நிலையான மற்றும் தூய்மையான ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம், பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரித்து, புதைபடிவ எரிபொருட்களின் மீதான சார்பைக் குறைக்கும் இந்திய அரசின் நீண்டகால இலக்குடன் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சிக்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக மின்மயமாக்குவது சிரமமான அல்லது அதிக செலவு ஏற்படும் ரயில் வழித்தடங்களில், ஹைட்ரஜன் தொழில்நுட்பம் ஒரு மாற்றுத் தீர்வாக அமையக்கூடும். சோதனை வெற்றிகரமாக அமைந்தால், இதுபோன்ற வழித்தடங்களிலும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் வாய்ப்பு உருவாகும்.

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்திற்கு சில சவால்களும் உள்ளன. ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான செலவு அதிகமாக உள்ளது. மேலும், முழுமையான சுற்றுச்சூழல் பலனைப் பெற பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியையே நம்ப வேண்டிய நிலை உள்ளது. ஹைட்ரஜனை பாதுகாப்பாக சேமித்து, அதிக அழுத்தத்தில் கையாள வேண்டிய தேவையும் தொழில்நுட்ப ரீதியாக சவாலாக உள்ளது. அதேபோல், பல்வேறு காலநிலை சூழ்நிலைகளில் இந்த ரயில்களின் செயல்திறனையும் விரிவாக சோதிக்க வேண்டியுள்ளது. மொத்தத்தில், இந்திய ரயில்வேயின் எதிர்கால தொழில்நுட்ப மாற்றத்தில் ஹைட்ரஜன் ரயில்கள் முக்கிய இடம் பெறும் என்று கருதப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான ரயில் பாதைகளில் மின்மயமாக்கலே முக்கிய உத்தியாகத் தொடரும் நிலையில், மின்மயமாக்கல் சாத்தியமில்லாத அல்லது பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்கள் ஒரு பயனுள்ள துணைத் தீர்வாக உருவெடுக்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.