இந்தியா

முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்...இரங்கல் தெரிவிக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்...!

Tamil Selvi Selvakumar

இங்கிலாந்து மகாராணி 2ம் எலிசபெத் மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட இந்திய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தலைவர்களின் இரங்கல் செய்தி:

நீண்ட நாள் மகாராணியாக இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த, 96 வயதான 2ஆம் எலிசபெத் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை இல்லத்தில், அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், மிக நீண்ட காலம் இங்கிலாந்தில் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கற்பதிவில், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 70 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்தையும், மக்களையும் வழிநடத்தி வந்த ஒரு சகாப்தம் கடந்து விட்டது என்றும், இந்த சூழலில் இங்கிலாந்து மக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதுடன், குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். 

இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரிட்டன் மக்கள் மற்றும் அவர்களது அரச குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆளுமையை கண்ணியத்துடன் நிறைவேற்றியதாக பதிவிட்டுள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மகாராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பொது வாழ்வில் கண்ணியம், அர்ப்பணிப்புக்கு பெயர் போனவர் 2ஆம் எலிசபெத் ராணி என்றும், ஒரு சகாப்தமே தற்போது முடிவுக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பிரபல நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் மகாராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். அதேபோன்று, 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். 5 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.