இந்தியா

இந்திய ஒன்றியம், இந்திய ஒன்றியம் .! கண் எதிரிலேயே எல்.முருகனை கடுப்பேற்றிய பாஜக அமைச்சர்கள்.! 

Malaimurasu Seithigal TV

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் முன்னிலேயே பாஜக அமைச்சர்கள் "இந்திய ஒன்றியம்" என்று கூறி பதவியேற்ற சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்ததும் ஒன்றிய அரசு எந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியது. இது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் ஒரே நாடு. ஒரே ஆட்சி என்ற கொள்கையை கையிலெடுத்து செயல்படும் பாஜகவுக்கு இது பெரும் எரிச்சலைக் கொடுத்தது. மத்திய அரசு என்று தான் அழைக்கவேண்டும், ஒன்றிய அரசு என்று அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் புகார் கொடுப்போம் என்று சொல்லும் அளவு பாஜக சென்றது.

ஒன்றிய அரசு பற்றிய கேள்விக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கூட காட்டமாக பதிலளித்தார். மேலும் ஒன்றிய அரசு என்று சொல்பவர்கள் பிரிவினைவாத சக்திகள் என்ற ரீதியிலும் பேசினார். ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என்று பதிலடி கொடுத்தார். 

இந்நிலையில் புதுவையில் பாஜக -என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்து பல நாட்களுக்கு பிறகு நேற்று அமைச்சரவை பொறுப்பேற்றது. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா ஆகியோரும், பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 

இவர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அப்போது "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்" என்று ஆளுநர் தெரிவிக்க, அதை பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களும்  அப்படியே கூறி பதவியேற்றனர். குறிப்பாக, " இந்திய ஒன்றியம்" என்று ஆளுநர் கூற அதை பதவியேற்ற அமைச்சர்களும் திருப்பிக்கூறினர். 

இந்த பதவியேற்பு நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் கலந்துகொண்டார். அவரது முன்னிலேயே பாஜக அமைச்சர்கள் "இந்திய ஒன்றியம்" என்று கூறி பதவியேற்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. மேலும் இதை வைத்து சிலர் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.