இந்தியா

மீண்டும் மண்ணெண்ணெய் பயன்பாட்டிற்கு திரும்புகிறதா இந்தியா? போரினால் வெளியாகியுள்ள அரசின் புதிய அறிவிப்புகள்!

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தற்போது பொது விநியோக அமைப்பின், உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய, பொதுத்துறை

மாலை முரசு செய்தி குழு

ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கு மண்ணெண்ணெய் விரைவாக விநியோகிக்க ஏதுவாக, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிகளைத் தளர்த்துவதாக இந்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தற்போது பொது விநியோக அமைப்பின், உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மார்ச் 29 அன்று இந்தியாவில் எரிசக்தி விநியோக நிலவரம் குறித்த தனது தினசரி அறிக்கையில், எல்பிஜி தேவையின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள்களை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று அமைச்சகம் குறிப்பிட்டது. இதனடிப்படையில், திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக, நியமிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் வீடுகளில் மண்ணெண்ணெயை சேமித்து விநியோகிக்க அனுமதிக்கப்படும். ஒவ்வொரு நிலையமும் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்கலாம். மேலும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் ஒரு மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்கள் அடையாளம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, 2002ம் ஆண்டு பெட்ரோலிய விதிகளின் சில பிரிவுகளிலிருந்து விலக்கு அளித்து, மண்ணெண்ணெயைக் கையாளும் விற்பனையாளர்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகளைத் தளர்த்தியுள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், சேமிப்பு, நகர்வு மற்றும் இறுதிக்கட்ட விநியோகத்தை விரைவுபடுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலைமையைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கிய, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உருவாகி வரும் மேற்கு ஆசிய நெருக்கடியின் தாக்கத்தை நிர்வகிப்பதற்கு, நடுத்தர மற்றும் நீண்ட காலத் தயார்நிலை மற்றும் விரைவான முடிவெடுத்தல் ஆகியவற்றின் அவசியத்தை சனிக்கிழமை பேசினார்.

இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் பூரி, மனோகர் லால் கட்டார் மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். செயலாளர்களின் ஏழு அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் வழங்கிய விளக்கவுரைகளில், துறை சார்ந்த சவால்கள் மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொள்கை நடவடிக்கைகள் கோடிட்டுக் காட்டப்பட்டன. தற்போது, எல்பிஜி தேவையின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிறு, நடுத்தர மற்றும் இதர நுகர்வோருக்கு நிலக்கரியை விநியோகிப்பதற்காக, மாநிலங்களுக்கு அதிக அளவில் நிலக்கரியை ஒதுக்கீடு செய்யுமாறு 'கோல் இந்தியா' மற்றும் 'சிங்கரேனி நிலக்கரி' நிறுவனங்களுக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.