இந்தியா

“சாக்கடை தலைமுறை.. வெட்கமின்றி வாழ்கின்றனர்” - Gen Z தலைமுறையை மீது கடும் விமர்சனம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்!

போதைப்பொருள், மது அருந்துதல் மற்றும் பலருடன் உறவில் இருப்பதை சுதந்திரம் என்ற பெயரில் பெருமையாகக் காட்டுகின்றனர்...

Mahalakshmi Somasundaram

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டம் குறித்து பா.ஜ.க. எம்.பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துகள் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் முழக்கங்கள் "வாந்தி வரும் உணர்வை ஏற்படுத்தின" என்றும், தற்போதைய தலைமுறையை "Generation Gutter" (சாக்கடைத் தலைமுறை) என்றும் அவர் விமர்சித்திருப்பது எதிர்க்கட்சிகள் மற்றும் இளம் தலைமுறை இளைஞர்களிடையே  கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

கங்கனா ரணாவத் கூறியதாவது:

"டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் 75 வயதான பிரதமர் மோடியை குறிவைத்து பேசியதுடன், அவரது மறைந்த தாயாரையும் அவமதித்தனர். நானும் மாணவர் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் இவர்கள் உண்மையில் மாணவர்கள் போலவே தெரியவில்லை. அவர்கள் பயன்படுத்திய மொழியும் நடத்தையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.

மேலும், "நான் 16 வயதிலேயே பொருளாதார ரீதியாக சுயநிறைவு பெற்றேன். ஆனால் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பலர் இன்னும் பெற்றோரின் வருமானத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். எதிர்காலத்தில் சட்ட உதவி தேவைப்பட்டால், அதற்கான சுமையை அவர்களின் பெற்றோர்கள்தான் ஏற்க வேண்டியிருக்கும். நான் ஒருபோதும் என் பெற்றோருக்குச் சுமையாக இருந்ததில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தற்போதைய Gen Z தலைமுறையை கடுமையாக விமர்சித்த கங்கனா, "இவர்களை நான் 'Generation Gutter' என்று அழைக்கிறேன். என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அருவருப்பான செயல்களை நான் பார்த்ததில்லை. மேற்கத்திய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இந்திய பெண்களின் புதிய தலைமுறை இது. இவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை. குடும்பப் பொறுப்புகளையும் ஏற்க விரும்புவதில்லை. இல்லத்தரசிகளாக வாழ முடியாத அளவிற்கு மோசமானவர்கள். போதைப்பொருள், மது அருந்துதல் மற்றும் பலருடன் உறவில் இருப்பதை சுதந்திரம் என்ற பெயரில் பெருமையாகக் காட்டுகின்றனர். 

அதே நேரத்தில் பெற்றோரின் வருமானத்தில் வெட்கமின்றி வாழ்கின்றனர்" என்று விமர்சித்தார். கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மாணவர் போராட்டம் குறித்த கங்கனா ரணாவத்தின் கருத்துகள் தற்போது அரசியல் ரீதியாக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அவரது கருத்துகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.