கேரள மாநில அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த இடதுசாரிகளின் ஆதிக்கம் இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வரப்போவதாக எக்ஸிட் போல் கணிப்புகள் அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றும் கேரள மக்கள், கடந்த 2021-ல் மட்டும் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் (LDF) கூட்டணிக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பளித்தனர். ஆனால், இந்த முறை அந்தத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF) கூட்டணி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரப்போவதாகக் கணிப்புகள் கூறுகின்றன. 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டசபையில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில், யுடிஎஃப் கூட்டணி 78 முதல் 90 இடங்கள் வரை பிடித்துப் பெரும்பான்மையுடன் வெல்லும் என்று என்டிடிவி ஆக்சிஸ் மை இந்தியா (NDTV Axis My India) கணித்துள்ளது.
அதே சமயம், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணிக்கு 49 முதல் 62 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணிப்பு மட்டும் உண்மையானால், நாடு முழுவதும் உள்ள இடதுசாரி இயக்கங்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படும். ஏற்கனவே மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஆட்சியை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, அவர்களின் கடைசி கோட்டையாகக் கருதப்படும் கேரளாவிலும் தோல்வி ஏற்பட்டால் அது ஒரு சகாப்தத்தின் முடிவாக இருக்கும். மற்றொரு பக்கம், பாஜக கூட்டணிக்கு 0 முதல் 3 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.
என்டிடிவி மட்டுமல்லாது 'பீப்பிள்ஸ் பல்ஸ்' (75-85 இடங்கள்), 'வோட் வைப்' (70-80 இடங்கள்) மற்றும் 'பீப்பிள்ஸ் இன்சைட்' (66-76 இடங்கள்) எனப் பெரும்பாலான நிறுவனங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளன. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே மொத்தம் உள்ள 20 இடங்களில் எல்டிஎஃப் ஒரு இடத்தை மட்டுமே வென்றபோதே, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசுவது தெரிந்தது. அதைத்தொடர்ந்து நடந்த இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் எதிரொலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் கேரளா முழுவதும் 78.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது அந்த மாநிலத்தின் மிக உயர்ந்த வாக்குப்பதிவுகளில் ஒன்றாகும். சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே ஆட்சி மாற்றத்தை விரும்புவது தெரியவந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 99 இடங்களை அள்ளி வரலாற்றுச் சாதனை படைத்த பினராயி விஜயன் அரசு, இந்த முறை மக்கள் செல்வாக்கை இழந்திருப்பதாகக் கணிப்புகள் காட்டுகின்றன.
கேரளாவைப் பொறுத்தவரை எப்போதுமே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகள் மாறி மாறி ஆட்சி அமைப்பதுதான் வழக்கம். அந்த பழைய 'சீசா' பாணி அரசியலுக்கே கேரளா மீண்டும் திரும்பப்போவதை இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுடன் சேர்த்து கேரளாவின் தேர்தல் முடிவுகளும் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ளன. எக்ஸிட் போல் கணிப்புகள் சில நேரங்களில் தவறாகக் கூட அமையலாம் என்றாலும், இப்போதைக்கு கேரளாவில் கை சின்னத்தின் கை ஓங்கி இருப்பதே கள நிலவரமாகத் தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.