இந்தியா

முல்லைப் பெரியாறில் அணை கட்டுவதே கேரளாவின் நிலைப்பாடு - அமைச்சர் ரோஷி அகஸ்டின் கருத்து!

Tamil Selvi Selvakumar

முல்லைப் பெரியாறில் அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கருத்து தெரிவித்துள்ளது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முல்லை பெரியாறு அணை விவகாரம்:

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் அணை கட்டுவது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முல்லைப் பெரியாறில் அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு:

அதில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார். அணையில் 136 அடி நீர்மட்டம் என்பது கேரளாவின் நிலைப்பாடு என்றும், ஆனால், 142 அடி என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கேரளாவுக்கு பாதுகாப்பு, அதேநேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் என்பதே கேரளாவின் இலக்கு என்றும் பதிவிட்டுள்ளார்.

தற்போது உள்ள அணையின் கீழ்ப்பகுதியில் ஆயிரத்து 300 அடி தொலைவில் புதிய அணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் புதிய அணை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,  அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பது கேரளாவுக்கு சாதகமான ஒன்று என்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின்https://www.facebook.com/roshyaugustineminister பதிவிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து தமிழக விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.