claire mazumdar claire mazumdar
இந்தியா

கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசு இவர்தான்! பயோகான் கிரண் மஜும்தார் ஷா அறிமுகப்படுத்திய 'மாஸ்' வாரிசு! யார் இந்த கிளேர்?

கிளேரின் தலைமைப் பண்பு மற்றும் உலகளாவிய நிறுவனத்தை நடத்தும் திறன் ஆகியவற்றைக் கண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

இந்தியாவின் முன்னணி பயோடெக்னாலஜி நிறுவனமான பயோகான் (Biocon), தனது அடுத்தக்கட்ட தலைமை மாற்றத்திற்கான ரகசியத்தை உடைத்துள்ளது. பயோகான் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான கிரண் மஜும்தார் ஷா, தனது அண்ணன் மகளான கிளேர் மஜும்தாரை தனது வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த நாற்பது ஆண்டுகளாக பயோகான் நிறுவனத்தை ஒரு உலகத்தரம் வாய்ந்த பயோ-பார்மாசூட்டிகல் நிறுவனமாக வளர்த்தெடுத்த 73 வயதான கிரண் மஜும்தார் ஷா, நிறுவனத்தின் எதிர்காலம் சரியான கைகளில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், கிளேரின் தலைமைப் பண்பு மற்றும் உலகளாவிய நிறுவனத்தை நடத்தும் திறன் ஆகியவற்றைக் கண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தலைமை மாற்றம் என்பது உடனடியாக நடக்கப்போவது இல்லை என்றும், இது ஒரு நிதானமான செயல்முறை என்றும் கிரண் மஜும்தார் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைக்கு அவர் தனது பொறுப்பில் நீடிப்பார் என்றும், அதே சமயம் கிளேர் படிப்படியாக நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார். கிளேர் ஏற்கனவே ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருப்பதே, அவரைத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் என்று கிரண் மஜும்தார் ஷா ஃபார்ச்சூன், இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

பயோகான் சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசாகக் கருதப்படும் 37 வயதான கிளேர் மஜும்தார், பயோடெக் துறையில் ஒரு கைதேர்ந்த நிபுணர் ஆவார். இவர் பயோகான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'பிகாரா தெரபியூட்டிக்ஸ்' (Bicara Therapeutics) என்ற புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன சிஇஓ ஆகப் பணியாற்றி வருகிறார். கிளேரின் தலைமையில் இந்த நிறுவனம் 2024-இல் அமெரிக்காவின் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. தொடக்கத்தில் 800 மில்லியன் டாலர் மதிப்பில் இருந்த இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, தற்போது 1.6 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இவரது இந்த அபாரமான வளர்ச்சி கிரண் மஜும்தார் ஷாவை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கல்வித் தகுதியிலும் கிளேர் மஜும்தார் மிகவும் பலமான பின்னணியைக் கொண்டுள்ளார். இவர் உலகின் புகழ்பெற்ற எம்ஐடி (MIT) பல்கலைக்கழகத்தில் உயிரியல் பொறியியல் படிப்பையும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் உயிரியலில் பிஎச்டி மற்றும் எம்பிஏ பட்டங்களையும் பெற்றுள்ளார். பிகாரா நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, 'தேர்ட் ராக் வென்ச்சர்ஸ்' போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் பணியாற்றிப் பல புதிய நிறுவனங்களை உருவாக்க உதவியுள்ளார். மேலும், நோரா ஹெல்த் போன்ற சில தொண்டு நிறுவனங்களின் நிர்வாகக் குழுவிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

கிளேர் மஜும்தார் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணராகப் பணியாற்றும் தாமஸ் ராபர்ட்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசித்து வருகிறார். புற்றுநோய் சிகிச்சையில் உலக அளவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள கிளேர், விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய பயோடெக் சாம்ராஜ்யமான பயோகான் நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராகி வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.