வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. ஆனால், அப்படி அமைதியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தம்பதியின் வீட்டுக்குள் திடீரென சிறுத்தை ஒன்று நுழைந்தால் எப்படி இருக்கும்? இதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. இரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தம்பதியினர் எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும், சமயோசிதமாகச் செயல்பட்ட பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டியதால் சிறுத்தை உள்ளேயே சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் சுமார் ஆறு மணி நேரம் போராடி சிறுத்தையைப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள குனிகல் தாலுகாவுக்கு உட்பட்ட பண்டிகவுடனபாள்யா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சிக்கமரியப்பா என்பவரின் வீட்டில் திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது சிக்கமரியப்பாவும் அவரது மனைவி நரசம்மாவும் வீட்டுக்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது வெளியே கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்த சிறுத்தை, அதனுடன் வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
திடீரென வீட்டுக்குள் சிறுத்தை வந்ததைக் கண்ட நரசம்மா ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், ஆபத்தை உணர்ந்து உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடினார். பின்னர் துரிதமாகச் செயல்பட்டு வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டினார். இதனால் சிறுத்தை வீட்டுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. அந்த நேரத்தில் சிறுத்தை வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கட்டிலுக்குக் கீழே மறைந்துகொண்டது. இதற்கிடையே, வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் கிராம மக்கள் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுத்தை வீட்டுக்குள் மறைந்திருந்ததால் அதனைப் பிடிப்பது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்தது. வீட்டின் குறுகிய இடம், சிறுத்தையின் திடீர் தாக்குதல் அபாயம் போன்ற காரணங்களால் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் வீட்டின் அருகே செல்ல வேண்டாம் என்றும், சிறுத்தையைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக பன்னர்கட்டா பகுதியில் இருந்து மயக்க ஊசி செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற கிரண் என்பவரும் வரவழைக்கப்பட்டார். வனத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இணைந்து சிறுத்தை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதனைப் பாதுகாப்பாகப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் ஆறு மணி நேரம் நீடித்த இந்த மீட்புப் பணியின் முடிவில், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அது மயங்கிய நிலையில் பாதுகாப்பாகக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென நிகழ்ந்ததாகத் தோன்றினாலும், அந்தக் கிராம மக்கள் ஏற்கனவே சிறுத்தையின் நடமாட்டத்தைக் கவனித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாகவே கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை தென்பட்டதாகவும், கால்நடைகளைத் தாக்கி வந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சமாக இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டம் குறித்து முன்பே தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சில கிராம மக்கள் வனத்துறையினரிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் முன்கூட்டியே கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீட்டுக்குள் சிறுத்தை புகுந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், நரசம்மாவின் சமயோசிதமான செயல்பாடும் வனத்துறையினரின் நீண்ட நேர மீட்புப் பணியும் பெரும் உயிர் ஆபத்தைத் தவிர்த்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.