ICMR NIN Hyderabad 
இந்தியா

"வைட்டமின் D குறைபாடு இதயத்தையும் பாதிக்குமா?" - புதிய ஆய்வில் தெரியவந்த முக்கிய தகவல்கள்!

வைட்டமின் D குறைபாடு மற்றும் இதய செல்களில் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ், செல்களின் செயல்பாடு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை ஆய்வு புரிந்துகொள்ள முயன்றது.

மாலை முரசு செய்தி குழு

வைட்டமின் D என்றாலே எலும்புகளின் வலிமை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றித்தான் பொதுவாக பேசப்படுகிறது. ஆனால், உடலில் வைட்டமின் D அளவு குறைவாக இருப்பது இதய செல்களிலும் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வைட்டமின் D குறைபாடு இதயத்தில் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இயற்கையான பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR-NIN), ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவுகள் சர்வதேச அறிவியல் இதழான “Steroids”ல் 2026 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளன. வைட்டமின் D குறைபாடு மற்றும் இதய செல்களில் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ், செல்களின் செயல்பாடு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை ஆய்வு புரிந்துகொள்ள முயன்றது.

ஆய்வுக்காக எலிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சிலவற்றுக்கு போதுமான அளவு வைட்டமின் D வழங்கப்பட்டது. மற்றொரு குழுவுக்கு குறைந்த அளவு அல்லது வைட்டமின் D குறைபாடு ஏற்படும் வகையிலான உணவு வழங்கப்பட்டது. பின்னர் இதய திசுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வைட்டமின் D குறைபாடு கொண்ட எலிகளின் இதயத்தில் ஆக்சிடேட்டிவ் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதே நேரத்தில், உடலை ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸிலிருந்து பாதுகாக்க உதவும் சில முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட் என்சைம்களின் செயல்பாடும் குறைந்திருந்தது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட்ட ஒன்று Nrf2 எனப்படும் செல்களின் பாதுகாப்பு வழிமுறை. உடலில் அதிகப்படியான ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்படும் போது, செல்களை பாதுகாக்கும் இயற்கையான செயல்பாடுகளை Nrf2 பாதை ஊக்குவிக்கிறது. ஆனால் வைட்டமின் D குறைபாடு கொண்ட எலிகளின் இதயத்தில் இந்த பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடு குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இதய செல்கள் ஆக்சிடேட்டிவ் பாதிப்புக்கு அதிகமாக உள்ளாகக்கூடிய சூழல் உருவாகலாம்.

மேலும், இதய செல்களில் “ER stress” எனப்படும் எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம் அழுத்தத்திற்கான அறிகுறிகளும் அதிகரித்திருந்தன. செல்களுக்குள் புரதங்களை உருவாக்கி ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்புதான் எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம். அதில் அதிக அழுத்தம் ஏற்பட்டால், செல்களின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படலாம். அதோடு, ஆட்டோஃபேஜி மற்றும் அபாப்டோசிஸ் எனப்படும் செல்களின் அழிவு தொடர்பான செயல்பாடுகளும் வைட்டமின் D குறைபாடு கொண்ட இதய திசுக்களில் அதிகரித்திருந்தன.

குறிப்பாக BAX, BIM போன்ற செல்கள் அழிவுடன் தொடர்புடைய புரதங்களின் அளவு அதிகரித்திருந்ததாக ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் நீண்ட காலமாக ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் நீடித்தால் இதய செல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதனை மேலும் பரிசோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் இதய செல்களையும் ஆய்வகத்தில் தனியாக பரிசோதித்தனர். ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தப்பட்டபோது செல்களின் உயிர்வாழ்வு குறைந்ததுடன், செல்கள் அழிவுடன் தொடர்புடைய பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டன. ஆனால் செயலில் உள்ள வைட்டமின் D வடிவத்தை முன்கூட்டியே செல்களுக்கு வழங்கியபோது, ஆன்டிஆக்ஸிடன்ட் பாதுகாப்பு அதிகரித்ததுடன், செல்களின் அழுத்தம் மற்றும் அழிவு தொடர்பான அறிகுறிகள் குறைந்தன. ஆனால், இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இந்த ஆய்வு மனிதர்களிடம் நடத்தப்படவில்லை. எலிகள் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இதய செல்களை அடிப்படையாகக் கொண்டதே ஆய்வு. எனவே, வைட்டமின் D குறைபாடு உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இதே வகையான இதய பாதிப்பு ஏற்படும் என்று இதன் அடிப்படையில் கூற முடியாது. மனிதர்களிடம் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகே இதன் தாக்கத்தை தெளிவாக உறுதி செய்ய முடியும் என்று ICMR-NIN தெரிவித்துள்ளது.

வைட்டமின் D உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், ஆய்வு வெளியானதைக் காரணமாகக் கொண்டு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அதிக அளவு வைட்டமின் D மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரியான நடைமுறை அல்ல. உடலில் வைட்டமின் D அளவு குறைவாக இருப்பதாக சந்தேகம் இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன் தேவையான பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உணவு அல்லது சப்ளிமென்ட் குறித்து முடிவு செய்வது பாதுகாப்பானது.

புதிய ஆய்வு, வைட்டமின் D-க்கும் இதய செல்களின் ஆரோக்கியத்துக்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு முக்கியமான தொடர்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதை மனிதர்களுக்கான உறுதியான மருத்துவ முடிவாக பார்க்காமல், எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டும் முக்கியமான அறிவியல் தகவலாக பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்