இந்தியா

"முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை" மணிப்பூர் முதல்வர் அறிவிப்பு!

Malaimurasu Seithigal TV

மணிப்பூரில் பிரேன்சிங் வீட்டின்முன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

பழங்குடி அந்தஸ்து கேட்ட மெய்டி இனத்தவர்களுக்கும், இதனை எதிர்த்த குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 மாதங்களாக மாநிலத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் சென்றடைந்த ராகுல்காந்தி மொய்ராங் நிவாரண முகாமுக்குச் சென்று மக்களை சந்தித்தார். அப்போது குழந்தைகள், பெண்கள் என கண்ணீருடன் ராகுல்காந்தியிடம் நிலைமை தொடர்பாக எடுத்துரைத்தனர்.

இம்பாலில் ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மணிப்பூருக்கு அமைதி மட்டுமே தேவை எனவும் நிவாரண முகாம்களில் உள்ள குறைபாடுகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகப் போவதாகவும், ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து இம்பாலில் உள்ள பிரேன்சிங் வீட்டின் வெளியே ஏராளமான பெண்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் திரண்டு அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதத்தை கைப்பற்றி ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இக்கட்டான இச்சூழலில் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதில்லை என பிரேன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பது உறுதியாகியுள்ளது.