இந்தியா

புதிய அமைச்சர்களுடன் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆலோசனை...தீர்மானம் நிறைவேற்றிய என்.சி.பி !

Tamil Selvi Selvakumar

மகாராஷ்டிர துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற அஜித்பவார், புதிய அமைச்சர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியதை அடுத்து, தொண்டர்கள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்த அஜித்பவார், 8 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நேற்று பாஜக-சிவசேனா கூட்டணியில் இணைந்தார். மாநிலத்தின் இரண்டாவது துணை முதலமைச்சராக அஜித்பவாரும், அமைச்சர்களாக 9 எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்றனர். இந்நிலையில் 53 எம்.எல்.ஏக்களில் 40 பேர் தன்னுடன் இருப்பதாகவும், இனிவரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் அஜித்பவார் அறிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஆதரவு அமைச்சர்களுடன் அஜித்பவார் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்தும் மாலைகள் அணிவித்தும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுபுறம், சரத்பவார் சதாராவில் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்புடன், இன்று மாலை மகாராஷ்டிராவில் மாநில எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அஜித்பவார் மற்றும் 8 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக கூட்டணியில் 9 பேரும் இணைந்த நிலையில், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.