இந்தியாவில் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றச் செய்யவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மிகக் கடுமையான புதிய நடைமுறையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒரு காலண்டர் ஆண்டில் (ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை) ஒரு வாகன ஓட்டி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை போக்குவரத்து விதிகளை மீறினால், அவருடைய ஓட்டுநர் உரிமம் (Driving Licence) நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் அல்லது தற்காலிகமாகச் செல்லாததாக்கப்படும். இந்த அதிரடி மாற்றம் 2026 ஜனவரி 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ஹெல்மெட் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் செல்வது (Red signal jumping) போன்ற சாதாரணத் தவறுகள் கூட இப்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். முன்பு இத்தகைய தவறுகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஒரே வருடத்தில் இத்தகைய தவறுகளை ஐந்து முறை செய்து பிடிபட்டால், அந்த நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) அல்லது மாவட்ட போக்குவரத்து அலுவலகம் (DTO) இந்த நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளன.
இந்தத் தகுதி நீக்கம் தொடர்பான புதிய திருத்தம் மோட்டார் வாகன விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக அதிவேகமாகச் செல்லுதல், வாகனத் திருட்டு, பயணிகளைத் துன்புறுத்துதல் போன்ற 24 கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் சிக்னலைத் தாண்டுவது போன்ற எளிய விதிமீறல்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் இந்தத் தவறுகள் கணக்கிடப்படும். ஒரு ஆண்டில் செய்த தவறுகள் அடுத்த ஆண்டின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஓட்டுநர்களின் 'நடத்தை' புதிதாகக் கண்காணிக்கப்படும்.
விதிமீறலில் ஈடுபடும் நபருக்குத் தனது தரப்பு விளக்கத்தைக் கூற ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இருப்பினும், ஆதாரங்களுடன் பிடிபடும் பட்சத்தில் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மற்றும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து போலீசாரிடம் சிக்காமல் போனாலும் தானியங்கி முறையில் 'இ-சல்லான்' (e-Challan) உருவாக்கப்பட்டுவிடும். இது நேரடியாக வாகன உரிமையாளரின் மொபைல் எண் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தப்பிப்பது இனி சாத்தியமில்லை.
இந்தக் கடுமையான விதிகளுக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. சாலை பாதுகாப்பிற்கு இது மிகச் சரியான நடவடிக்கை என்று ஒரு தரப்பினர் கூறினாலும், சாலைகளில் சரியான போக்குவரத்து அடையாளங்கள் (Signs) மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலையில் இத்தகைய விதிகள் பொதுமக்களைப் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கேமராக்கள் மூலம் தவறாக அபராதம் விதிக்கப்பட்டால் அதைப் புகார் செய்ய முறையான வழிமுறை (SOP) வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், அபராதத் தொகையைச் செலுத்துவதிலும் புதிய கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகச் சல்லான் விதிக்கப்பட்டால், அதை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் அல்லது முறையிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த நபர் தவறை ஒப்புக்கொண்டதாகக் கருதப்பட்டு, அடுத்த 30 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் வாகனப் பதிவு அல்லது லைசென்ஸ் முடக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் இனி சாலைகளில் பயணிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சாதாரணத் தவறுதானே என்று அலட்சியமாக இருந்தால், அது உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் வாகனம் ஓட்ட முடியாத நிலையை ஏற்படுத்தக்கூடும். இந்த 2026-ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து விதிகளை மதிப்பது என்பது உங்கள் பணத்தைச் சேமிப்பது மட்டுமல்ல, உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மிக முக்கியமான ஒன்றாகும்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.