ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவுகளுடன் சேர்ந்து மின்சாரக் கட்டணத்தையும் சமாளிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட கிராமப்புறக் குடும்பங்களுக்கு மின்சாரக் கட்டணம் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆனால், இனி மின்சாரக் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லாத வகையில் ஒரு கிராமமே சூரிய மின்சாரத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள 141 வீடுகளிலும் சோலார் மின்சாரப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 282 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனை அந்தக் கிராமம் பெற்றுள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்காகக் கிராம மக்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவிட வேண்டிய நிலையும் ஏற்படவில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள கைரா என்ற சிறிய கிராமம்தான் தற்போது நாடு முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. இங்கு மொத்தம் 141 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுமார் 889 மக்கள் தொகையைக் கொண்ட இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் தலா 2 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சாரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து வீடுகளையும் சோலார் மின்சார வசதியுடன் இணைத்த முதல் கிராமம் என்ற சிறப்பை கைரா பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் 'பிரதமர் சூரிய வீடு: இலவச மின்சாரத் திட்டத்தின்' கீழ் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சோலார் பலகைகளைப் பொருத்துவதற்காகக் கிராம மக்கள் தங்களது கையிலிருந்து எந்தத் தொகையையும் செலுத்தவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மூலம் திட்டத்தின் அடிப்படைச் செலவுகள் ஈடுசெய்யப்பட்டன. மீதமுள்ள செலவுகள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டன. இதனால் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்கள்கூட எந்தவிதமான நிதிச் சுமையும் இல்லாமல் சூரிய மின்சார வசதியைப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு வீட்டிலும் 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்பு இருப்பதால், பகல் நேரங்களில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை முதலில் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் பகிர்மானக் கட்டமைப்புக்கு அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நெட் மீட்டரிங் (Net Metering) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தையும், பயன்படுத்தப்படும் மின்சாரத்தையும் கணக்கிட்டு, மீதமுள்ள மின்சாரத்தைப் பொதுவான மின் கட்டமைப்புக்கு வழங்க முடியும். இதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், சில சூழல்களில் கூடுதல் மின்சாரத்தின் மூலம் வருவாயும் பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். மொத்தம் உள்ள 141 வீடுகளில் 93 வீடுகள் பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை. புதிதாகக் கட்டப்பட்ட இந்த வீடுகளிலேயே சோலார் மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பட்டியலினக் குடும்பங்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சூரிய மின்சாரம் என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் தொழில்நுட்பம் அல்ல என்பதை இந்தக் கிராமம் நிரூபித்துள்ளது.
இந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ளூர் பெண்களின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, 'பிரதமர் சூர்ய சகி' எனப்படும் பெண்கள் குழுவினர் வீடு வீடாகச் சென்று சூரிய மின்சாரத் திட்டத்தின் நன்மைகளை எடுத்துரைத்துள்ளனர். திட்டத்தில் சேருவதற்குத் தேவையான விண்ணப்பங்கள், ஆவணங்கள் மற்றும் பிற நடைமுறைகளிலும் பொதுமக்களுக்கு உதவியுள்ளனர். சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டதால், ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய குடும்பங்கள்கூட இந்தத் திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளன. கிராமத் தலைவர், மாவட்ட நிர்வாகம், வங்கிகள் மற்றும் சமூகப் பொறுப்பு நிதி வழங்கிய நிறுவனங்கள் எனப் பல தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டியிருந்த குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக, ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழும் முதியவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்துள்ளது. தனியாக வசிக்கும் ஷோகில் கோண்ட் என்ற பெண், ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்கும் தனக்கு இனி மின்சாரக் கட்டணம் குறித்த கவலை இருக்காது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேபோல், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் கார்த்திக் யாதவ் உள்ளிட்ட பலரும் இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்துவதால் மின்சாரச் செலவு குறைவது மட்டுமின்றி, நிலக்கரி போன்ற எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் தேவையும் குறைகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், மின்சாரத் தேவைக்காகப் பிற பகுதிகளைச் சார்ந்திருக்கும் நிலை குறைந்து, கிராமங்களே தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்க முடியும்.
இதுவரை மின்சார நுகர்வோராக மட்டுமே இருந்த கிராம மக்கள், தற்போது மின்சார உற்பத்தியாளர்களாகவும் மாறியுள்ளனர். கைரா கிராமத்தின் இந்த முயற்சி மற்ற கிராமங்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அரசின் திட்டங்கள் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டால், கிராமப்புறங்களிலும் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்தச் சாதனை சான்றாக உள்ளது. எதிர்காலத்தில் இதேபோன்று மேலும் பல கிராமங்கள் முழுமையான சூரிய மின்சார வசதியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.