நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்தவதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர்.
அந்த குழுவின் அறிக்கைப்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமலுக்கான மசோதாகளுக்கு கடந்த 12ம் தேதி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதற்கு, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சிக்கு எதிரானது என கூறினார். மேலும், மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத போது இந்த மசோதாவை எப்படி அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.பி ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவதாக உள்ளது என்றும், அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சி இந்த மசோதாவிற்கு எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், அதற்காக அவையில் வாக்கெடுப்பு நடந்தது. அதில் 220 உறுப்பினர்கள் அனுப்ப வேண்டுமென ஆதரவும், 149 பேர் வேண்டாமென எதிர்ப்பும் தெரிவித்தனர்.இதன்மூலம், கூட்டுக்குழுவு பரிசீலனைக்கு இந்த மசோதா செல்லும் என்று சொல்லப்படுகிறது. அங்கு ஒப்புதல் வாங்கிய பிறகு மீண்டும் மசோதாக்கள் மக்களவைக்கு திரும்பி வரும் என்கிற யூகத்தை மத்திய அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.