தற்போதைய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சந்திரநாத் ரத் என்பவரின் கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகளை சிபிஐ வெளிக்கொண்டு வந்துள்ளது.
சுவேந்து அதிகாரி கடந்த மே மாதம் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர், அவருடன் நெருங்கிப் பணியாற்றிய சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்டார்.
கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொலையை, ஆப்பிள் போனின் ‘ஐக்ளவுட்’ (iCloud) கணக்கில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், சுங்கச்சாவடி கட்டணப் பதிவுகள், கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகள் மற்றும் ஹூக்ளி நதியின் ஆழத்தில் வீசப்பட்ட செல்போன் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் ஆதாரங்களை இணைத்துச் சிபிஐ வெளிக்கொண்டு வந்துள்ளது.
பராசத் நீதிமன்றத்தில், கூடுதல் தலைமை நீதிபதி முன்னிலையில் ஆகஸ்ட் 7 அன்று சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, இந்தச் சதித் திட்டத்தின் மூளையாக சந்திரநாத் ரத்தின் 29 வயது உதவியாளரான சாகர் சோங்கர் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
கடந்த மே 6-ம் தேதி இரவு 10 மணியளவில், கொல்கத்தாவின் மத்யம்கிராம் பகுதியில் சந்திரநாத் ரத் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் அவருடன் பயணித்த புத்ததேப் பெரா என்பவரும் படுகாயமடைந்தார்.
இந்த வழக்கில் இதுவரை 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணா குமார் சிங் என்பவரைத் தவிர, மற்ற 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 585 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முதன்மைக் குற்றவாளி சாகர் சோங்கர், அவரது சகோதரர் சாஹெப் சோங்கர் (இருவரும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள்), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விகாஷ் மிஸ்ரா, வினய் ராய், சஞ்சய் ராய், ஞானேந்திர சிங், ராஜ் குமார் சிங், கோலு சிங், நவீன் குமார் சிங் மற்றும் பீகாரைச் சேர்ந்த மயங்க் ராஜ் மிஸ்ரா, விக்கி மௌரியா ஆகியோர் அடங்குவர்.
சந்திரநாத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருந்த சாகர் அவரைக் கொலை செய்திருக்கிறார் என்பதை அவரது உறவினர்களால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், சாகரும் அவரது தம்பி சாஹெப்பும் சுவேந்து அதிகாரியின் பபானிபூர் தொகுதித் தேர்தல் பணிகளின்போது சந்திரநாத் ரத்தின் நிழலாகச் செயல்பட்டுள்ளனர்.
சந்திரநாத் ரத் இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். பாஜகவின் அரசியல் வியூக வாக்குப்பாளராக செயல்பட்ட இவர், சுவேந்து அதிகாரியின் நம்பிக்கையை பெற்று அவரது தனி செயலரானார். சாகர் மற்றும் சாஹெப் இவருடன் நெருங்கி பழகி இவரது பண பரிவர்த்தனைகளை கவனித்துக்கொள்ளும் அளவு நம்பிக்கையானவர்கள் ஆகியிருக்கின்றனர்.
ஜூலை 31 அன்று சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்தக் கொலைக்கு மாதக்கணக்காகத் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் உண்மையை சிபிஐ விசாரணை வெளிக்கொண்டு வந்துள்ளது.
தான் சந்திரநாத்திற்கு இணையானவன் என்றும், அவரை அகற்றினால் மட்டுமே சுவேந்து அதிகாரிக்கு மிக நெருக்கமாக முடியும் என்றும் சாகர் சோங்கர் எண்ணியதே இந்தக் கொலைக்கு முதன்மையான காரணம் என சிபிஐ கூறுகிறது.
சாகர் 2025 நவம்பர் மாதத்திலேயே, போலி முகவரியில் சிம் கார்டுகளையும் போன்களையும் வாங்கத் தனது தம்பி சாஹெப்பைப் பயன்படுத்தியுள்ளார். பின்னர், தனது பள்ளி நண்பரான விகாஷ் மிஸ்ராவைத் தொடர்புகொண்டு, கூலிப்படையை ஏவத் திட்டமிட்டுள்ளார். 2026 ஜனவரி 20 முதல் சாகரும் விகாஷும் தொடர்ந்து வாட்ஸ்அப் வழியே பேசி வந்துள்ளனர்.
ஜனவரி 30-ல், ஐந்து கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட வினய் ராயை விகாஷ் மிஸ்ரா தொடர்புகொண்டுள்ளார். தொடர்ந்து, பிப்ரவரி 6 அன்று கூலிப்படை கொலையாளிகளை ஏற்பாடு செய்யச் சூரத்திலிருந்த சஞ்சய் ராயை தனபாத் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வைத்து கொலைக்கான முதற்கட்டத் திட்டமிடல் நடந்துள்ளது.
கொல்கத்தாவிற்கு ‘பங்கஜ் சிங்’ என்ற போலிப் பெயரில் வந்திறங்கிய சஞ்சய் ராயின் தங்கும் விடுதிச் செலவுகளைச் சாகரே ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி 18-ல், சந்திரநாத்தின் அலுவலகம், உயர் நீதிமன்றப் பகுதி மற்றும் மத்யம்கிராம் ஆகிய இடங்களைச் சுற்றிக் காட்டியுள்ளார்.
ஏப்ரல் 7 அன்று, சஞ்சய் ராய், ஞானேந்திர சிங் மற்றும் ராஜ் குமார் சிங் ஆகியோர் கொல்கத்தாவின் பாடுலி பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனையாளரிடம் ‘மாருதி ஸ்விஃப்ட்’ காரைப் பார்வையிட்டுள்ளனர். ஏப்ரல் 18 அன்று ரூ. 3.80 லட்சத்திற்கு அந்தக் கார் வாங்கப்பட்டது. இதுதவிர, ‘நிசான் மைக்ரா’ கார் மற்றும் ‘ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்’ பைக் ஆகியவையும் வாங்கப்பட்டு, அவற்றின் எஞ்சின் எண்கள் அழிக்கப்பட்டு, போலி எண்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மே 6 அன்று, கூலிப்படையினர் தனபாத்திலிருந்து கொல்கத்தா நோக்கிப் புறப்பட்டுள்ளனர். கிருஷ்ணா குமார் சிங், ஞானேந்திர சிங், சஞ்சய் ராய் ஆகியோர் ஸ்விஃப்ட் காரிலும், மயங்க் ராஜ், விக்கி மௌரியா, கோலு சிங், ராஜ் குமார் ஆகியோர் நிசான் மைக்ரா காரிலும் பிரிந்து பயணித்துள்ளனர்.
சந்திரநாத் ரத் இருக்கும் இடத்தை ஃபேஸ்டைம் (FaceTime) செயலி வழியே சாகர் சோங்கர் கூலிப்படையினருக்குத் தெரிவித்துள்ளார். சந்திரநாத்தின் ஸ்கார்பியோ காரை ஒரு சந்தில் நிசான் மைக்ரா காரை நிறுத்தி வழிமறித்துள்ளனர். கிருஷ்ணா குமார் சிங்கும் ஞானேந்திர சிங்கும் சந்திரநாத் ரத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் ஏறித் தப்பி, பின்னர் ஸ்விஃப்ட் காரைப் பயன்படுத்தி உத்தரப் பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றபோது, வழியில் தங்களது செல்போன்களையும் சிம் கார்டுகளையும் அழித்து வீசியுள்ளனர்.
மத்யம்கிராமில் இருந்தபோது, சாகரின் போனுடன் இணைக்கப்பட்ட ஐக்ளவுட் கணக்கில் சந்திரநாத்தின் புகைப்படம் மார்ச் 18 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது மிக முக்கிய ஆதாரமாக அமைந்தது.
கொலை நடந்த மே 6-ம் தேதி இரவு 10.16 மணிக்கு, சந்திரநாத் இறந்துவிட்டாரா என்பதை உறுதிசெய்ய சாகரும் சஞ்சய் ராயும் ஃபேஸ்டைமில் பேசியுள்ளனர்.
கொலை நடந்த அரை மணி நேரத்தில் (இரவு 10.30 மணிக்கு), சாகர் தனது ஐபோனைத் தம்பி ரிஷப் சோங்கரிடம் கொடுத்து, ஹூக்ளி நதியில் வீசுமாறு கூறியிருக்கிறார். ஹவுரா பாலத்திலிருந்து ரிஷப் போனை நதியில் வீசும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
பிப்ரவரி 24 அன்று, ஜார்கண்டின் ஜாம்தாரா பகுதியில் சாகரின் தம்பி சாஹெப் ரூ. 30 லட்சத்தைக் கூலிப்படையிடம் ஒப்படைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்திரநாத்தின் உடலில் 8 துப்பாக்கிக் காயங்கள் இருந்தன. உடலிலிருந்தும், குற்றவாளிகளிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைச் சோதித்த தடயவியல் ஆய்வும் இந்த ஆதாரங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
நுட்பமாகத் திட்டமிடப்பட்ட போதிலும், நவீன டிஜிட்டல் தடயங்களின் உதவியால் இந்தத் தொடர் சதித் திட்டத்தைச் சிபிஐ முழுமையாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்