நமது மாலைமுரசு தொலைக்காட்சியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற நெற்றிக்கண் விவாத நிகழ்ச்சியில், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ், “இதுவரை 52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர், ஆனால் என் கணக்கின்படி பார்த்தால், 65 லட்சம் பேர் (SIR - Special Intensive Revision) படி நீக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையிலேயே உலகத்தில் திறமையான தேர்தல் ஆணையம் நமது இந்திய தேர்தல் ஆணையம் தான்.
இருபத்து ஐந்து நாட்களில் 65 லட்சம் வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சரிபார்த்து நீக்கி இருக்கிறார்கள் என்றால், இதை மிகப் பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இது எந்த அளவிற்கு ஒரு பைத்தியக்காரத்தனம் என்பது தெரியவில்லை, மக்களின் பணம் என்பது அரசாங்கத்திற்கு அவ்வளவு எளிதாகி விட்டதா? 99.9% பேருக்கு இதுவரை ஆதார் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு 2009-ல் தொடங்கி இன்று வரை பதினெட்டு ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு செலவு செய்து கைரேகை, விழித்திரை போன்ற தரவுகளைச் சேகரித்து அவற்றை இணையத்தில் பதிவிட்டு, அதைப் பல அரசு ஆவணங்களுடன் இணைத்து, சட்டப்படி தொடங்கப்பட்ட ஆதார் சேவையின் மூலம் வழங்கப்பட்ட ஆதார் எண் செல்லாது என ஒருவர் சொல்கிறார், அதைப் பார்த்து உச்ச நீதிமன்றம் அமைதி காக்கிறது என்றால், நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? என்னதான் நடக்கிறது?
இதைக் கேட்பதற்கு யாரும் இல்லையா? எப்படி நீங்கள் சொல்லலாம் ஆதார் செல்லாது என்று? வாக்காளர் அட்டையைத் தேர்தல் ஆணையம் நீங்கள் தானே கொடுத்தீர்கள்? இதுவரை 92 முதல் 95% தகுதி வாய்ந்த நபர்கள் வாக்காளர் அட்டை பெற்றுள்ளனர், இதற்குக் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இரண்டு ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இரண்டையும் கூட்டிப் பாருங்கள், ஆதார் வழங்க பதினெட்டு ஆயிரம் கோடி, வாக்காளர் அட்டை வழங்க இரண்டு ஆயிரம் கோடி ஆக மொத்தம் இருபது ஆயிரம் கோடி செலவு செய்து அரசாங்கம் கொடுத்தது செல்லாது எனில், இந்த அரசாங்கமே செல்லாதா? பான் கார்டு 43-45%, ரேஷன் கார்டு 75-80%, ஓட்டுநர் உரிமம் 15-20%, பாஸ்போர்ட் 6-7%, பிறப்பு சான்றிதழ் 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு 88%, நீங்கள் கொடுத்த முக்கிய ஆவணங்கள் செல்லாது, நீங்கள் கேட்கும் ஆவணங்களை நாங்கள் கொடுக்க வேண்டுமா?
இருபத்து ஐந்து நாட்களில் 65 லட்சம் பேரை நீக்கி விடுவீர்களா? எல்லா அகதிகளும் வந்து, பீகாரில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா? உங்கள் நோக்கம் தான் என்ன? வந்த 40 லட்சம் பேரும் பீகாரில் தான் இருந்தார்களா? உங்கள் கணக்கின்படி பார்த்தால் கூட மீதி 15 லட்சம் பேர் யார்? தலித்துகளுக்கு கிடையாது, முஸ்லிம்களுக்கு கிடையாது, ஏழை எளிய மக்களுக்கு கிடையாது, இது போல் தமிழ்நாட்டில் 30 லட்சம் பேரை நீக்கி விட்டால் என்ன நடக்கும்? இது நாடா, அல்லது வேறு என்ன? மகாராஷ்டிரா தேர்தலில் எப்படி ஒரு கோடி வாக்காளர்களைச் சேர்த்தார்கள்? மறுப்பு தெரிவிப்பதற்கு இடம் கொடுத்ததா தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்கவில்லை.
இதற்குத் தானே அமித்ஷாவிடம் வேலை பார்த்தவரைத் தேர்தல் ஆணையராக நியமித்தார்கள்? தேர்தல் ஆணையத்தை வைத்து ஆட்களைச் சேர்ப்பீர்கள், ஆட்களை நீக்குவார்கள். ஏனெனில், பூத் கமிட்டி தரவு வரை அவர்களிடம் உள்ளது. கண் துடைப்புக்காக வீடு வீடாகச் சென்றோம் என்கிறார்கள், அதற்கான ஆதாரங்கள் எங்கே? இங்கு வாக்காளர்களை நீக்குவதற்கான அடிப்படையே தவறாக இருக்கிறது. சேர்த்தவர்கள், நீக்கியவர்கள், இறந்தவர்கள் என அனைத்து தரவுகளையும் வெளிப்படையாகக் காட்டுங்கள். ஒரு திட்டத்தில் வெளிப்படை இல்லை என்றால், ஒரு முறையான செயல்முறை இல்லையென்றால், தவறுகள் நடக்கும். தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்,” எனக் கூறி, தேர்தல் ஆணையத்திற்குப் புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.