புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிகள், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா கீழ் கட்டப்பட்ட சாலைகள் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைக்கிறார்.
குடியரசு தலைவர் த்ரௌபதி முர்மு இன்று முதல் நான்கு நாள் பயணமாக நாகாலாந்து, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு செல்கிறார். இந்தத் தகவலை ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்டது.
நாகலாந்து பயணம்:
அவரது முதல் பயணமாக, குடியரசு தலைவர் முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று நாகாலாந்து சென்றடைகிறார். கோஹிமாவில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாகாலாந்து அரசு ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
அரசு திட்டங்கள்:
புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிகள், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சாலைகள் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைக்கிறார். இது தவிர, ராஜ்பவனில் அமைச்சர்களையும் அவர் சந்திக்கிறார்.
அதே நேரத்தில் குடியிருப்பு வளாகத்தில் நடைபெறும் அரசு விருந்தில் முதல்வர் கலந்து கொள்கிறார். அதன் பிறகு நாளை கோஹிமா போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் குடியரசு தலைவர் முர்மு.
இறுதியாக மாநிலத்தின் பழமையான அங்கமி சமூக கிராமமான கிக்வேமாவுக்குச் சென்று கிராம சபை உறுப்பினர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுடன் உரையாடுகிறார் முர்மு.
ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் 17 வது பட்டமளிப்பு விழாவில் நாளை கலந்து கொள்கிறார் குடியரசு தலைவர் முர்மு. அதனோடு மிசோரம் மாநிலத்தில் பல்வேறு கல்வி தொடர்பான திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
அன்று மாலை, ஐஸ்வாலில் உள்ள ராஜ் பவனில் மிசோரம் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவிலும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
நவம்பர் 4 ஆம் தேதி, ஐஸ்வாலில் மிசோரம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.
சிக்கிம் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் நவம்பர் 4 அன்று கலந்துகொள்கிறார் முர்மு. மேலும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முர்மு.
நவம்பர் 5 ஆம் தேதி டெல்லி திரும்புவதற்கு முன், ரவோங்கலாவில் உள்ள ததாகதா சல்லில், பெண் சாதனையாளர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் குடியரசு தலைவர் உரையாடுகிறார்.
கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரிபுரா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.