இந்தியா

மின்துறையை தனியார் மயமாக்க திட்டம்...கண்டன கோஷமிடும் ஊழியர்கள்...!

Tamil Selvi Selvakumar

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மின்துறையை தனியார் மயமாக்குதலுக்கு மத்திய அரசு முடிவு:

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தனியார் மயமாக்கத்துக்கான டெண்டர் கோரப்பட்டு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்த போராட்டம் நடத்தும் ஊழியர்கள்: 

இந்நிலையில், தனியார் மயமாக்குதலுக்கான டெண்டர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், மின் கட்டண வசூலிப்பவர்கள், மின்சார பராமரிப்பு ஊழியர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மேலும் உப்பளம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலக நுழைவாயில் கேட்டை இழுத்து பூட்டி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேச்சு வார்த்தை நடத்த திட்டம்:

ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்துறை சார்ந்த பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால்  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர புதுச்சேரி அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.