இந்தியா

மதுபானக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி, காலப்பட்டு தொகுதி நகரின் எல்லைப்பகுதியில் உள்ளது. இதனிடையே காலாப்பட்டு பகுதியில் புதியதாக மதுபானக்கடை திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவியது. இந்நிலையில் காலாப்பட்டு பகுதியில் புதியதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கலால்துறை ஆணையரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதியதாக மதுபானக்கடை அமைக்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்ததை தொடர்ந்து மறியலில் இருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் மறியல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.