நேகாவுடன் கைகோர்க்கும் ராகுல்.. அபிஜித்தை அரவணைக்கும் ஸ்டாலின்.. நாடாளுமன்ற தேர்தலில் 'Gen Z' வைக்கப்போகும் ட்விஸ்ட்! 
இந்தியா

நேகாவுடன் கைகோர்க்கும் ராகுல்.. அபிஜித்தை அரவணைக்கும் ஸ்டாலின்.. நாடாளுமன்ற தேர்தலில் 'Gen Z' வைக்கப்போகும் ட்விஸ்ட்!

தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டோம் எனக் கூறினாலும், காங்கிரஸை விடச் சிறந்த பாஜக எதிர்ப்பு இயக்கமாக CJP நிலைபெறுவது ராகுல் காந்திக்குத் தலைவலியாகவே முடியும்.

மாலை முரசு செய்தி குழு

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும் இந்தியா கூட்டணியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

நேற்றைய தினம் போராட்டக் களம் இல்லை என அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியுடன் போராட்டத்தைத் தொடங்கியதற்காக, கரப்பான்பூச்சி கட்சியின் முன்னணித் தலைவர்களான அஷுதோஷ், சௌரவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்தியா கூட்டணிப் போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோருடன் கைகோர்த்துக் கலந்துகொண்டார் நேகா போரா.

பாஜக அரசு ஒரு தரப்புப் போராட்டக்காரர்களைத் திகார் சிறைக்கு அனுப்புகிறது; மற்றொரு தரப்பினர் பேரணியை நடத்தி முடித்துள்ளனர். இப்படி இரு தரப்பினரையும் வெவ்வேறு விதமாகக் கையாள்வதன் மூலம் அவர்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தும் உத்தியை அரசு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார் அபிஜித் தீப்கே.

அஷுதோஷ், சௌரவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனது பதிவில், "சதிக் கோட்பாடுகள் நம்மைப் பிரிக்க அனுமதிக்காதீர்கள். நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில், நமக்குள்ளேயே சண்டையிடும் வலையில் சிக்காதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அஷுதோஷ், சௌரவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் முதலில் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் பாஜக அரசைக் கண்டித்துள்ளனர்.

உண்மையில், பாஜக மட்டுமல்ல, காங்கிரஸும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியைத் தயக்கத்துடனேயே அணுகி வருகிறது.

ஜந்தர் மந்தர் போராட்டத்தின் மூலம் கல்வித்துறை அமைச்சரைப் பணிய வைத்தபோது, CJP-யைத் தங்கள் போட்டியாளராகப் பார்த்தது காங்கிரஸ்.

இந்தியா கூட்டணி போராட்டத்துக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நேகா போரா

அண்ணா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஒத்த இயக்கமாகவே கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காங்கிரஸ் அணுகுகிறது. மன்மோகன் சிங் அரசின் வீழ்ச்சிக்கு அந்த இயக்கம் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது. அந்த இயக்கம் பாஜகவை வலுப்படுத்தவில்லை; மாறாக, காங்கிரஸின் ஆதரவைப் பிரித்து நீர்த்துப்போகச் செய்தது.

இந்த அச்சத்தின் காரணமாகவே பெரும்பாலான இடங்களில் CJP என்று குறிப்பிடாமல், நாட்டின் இளைஞர்கள் என்றே அழைக்கிறார் ராகுல் காந்தி.

அரசியல் நையாண்டியின் மூலம் இளைஞர்களின் பேராதரவைப் பெற்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தாங்கள் கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி அல்ல எனக் கூறி வருகிறது.

தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டோம் எனக் கூறினாலும், காங்கிரஸை விடச் சிறந்த பாஜக எதிர்ப்பு இயக்கமாக CJP நிலைபெறுவது ராகுல் காந்திக்குத் தலைவலியாகவே முடியும். ஆனாலும், அவர்களின் ஆதரவைப் பெற வேண்டிய அழுத்தம் ராகுலுக்கு உள்ளது.

இந்தியா கூட்டணிப் போராட்டமாக இருந்தாலும் சரி, இளைஞர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, தனது கர்ஜனையால் கவனம் பெறுகிறார் நேகா போரா. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் [CPI(ML) Liberation] சார்ந்த AISA இயக்கத்தின் தலைவர்.

இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறாது என நம்பக்கூடிய ஓர் இயக்கத்தைச் சார்ந்திருக்கிறார். அவரது அரசியலும் தன்னைவிட இயக்கத்தை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

CJP போராட்டத்தில் நேகா போரா

இவரும் "இங்கே ஒரே எதிரி பாஜக மட்டும் தான்" எனப் பேசினாலும், நேகா போராவுடன் கைகோர்க்கும்போது பாதுகாப்பாக உணர்கிறார் ராகுல்.

மறுபக்கம், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள திமுக, கரப்பான்பூச்சி கட்சியை வடக்கில் உள்ள ஆதரவு இயக்கமாக அணுகுகிறது. CJP தலைவரும் ஸ்டாலின் ஒரு சிறந்த முதல்வர் எனப் புகழாரம் சூட்டுகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, இரண்டு முறை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் தோல்வியைக் கண்டுள்ளது. இது கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வியும் நீண்ட காலமாக இருந்து வந்தது. திமுக இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்தக் கேள்விக்கு உயிர் கொடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மூன்றாவது கூட்டணிக்கான ஜென்-சி முகமாக அபிஜித் தீப்கே முன்னிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அப்படியானால், கெஜ்ரிவால், ஸ்டாலின், அதிருப்தியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் CJP ஆகியவை இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தாக்கரேவும் அகிலேஷும் கூட இதில் இணைவதைப் பரிசீலிக்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாவது ஆரோக்கியமானதுதான். ஆனால், அது NDA முகாமில் இருந்து பிரியாமல், இந்தியா கூட்டணியில் இருந்து பிரிவது பாஜக எதிர்ப்பை பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.

இந்த மூன்றாவது அணி திட்டம் திமுகவுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால், மற்ற கட்சிகளுக்கு மிகப் பெரிய ரிஸ்க். அந்தத் திட்டத்தைக் கையில் எடுக்கப் போகிறார்களா அல்லது பாஜகவுக்கு எதிராக ஒற்றுமையாக நிற்கப்போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்!