இளைஞர்களுடன் நேரடியாக உரையாடும் நோக்கில் காங்கிரஸ் முன்னெடுத்து வரும் ‘சத்ரோன் கி கூஞ்ச்’ நிகழ்ச்சிகள் கவனம் பெற்றுள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு வேறுபட்ட ஒரு செய்தியை கொடுத்துள்ளன. நாடு முழுவதும் இளம் தலைமுறையினரிடம் வேலைவாய்ப்பு, கல்வி, போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவர்களிடம் கிடைக்கும் வரவேற்பு மட்டும் தேர்தல் ஆதரவாக மாறிவிடாது என்பதையே முடிவுகள் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ‘சத்ரோன் கி கூஞ்ச்’ நிகழ்ச்சியின் ஐந்தாவது கட்டம் சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்றது. மாணவர்கள் தங்களுடைய கேள்விகளையும் பிரச்சினைகளையும் வெளிப்படையாக பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ராகுல் காந்தி இளைஞர்களிடம் உரையாடினார். இதற்கு முன்பு கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ், புனே உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, கல்வி அமைப்பில் ஏற்படும் தாமதங்கள், வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்றவை இளைஞர்களின் முக்கிய கவலைகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசும் இந்த பிரச்சினைகளை தனது இளைஞர் அணுகுமுறையின் முக்கிய பகுதியாக எடுத்துக்கொண்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ விளக்கத்திலும் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ‘சத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதே காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் வேறு ஒரு நிலையை வெளிப்படுத்தின. நான்கு முக்கிய பதவிகளில் மூன்றை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கைப்பற்றியது. காங்கிரஸின் மாணவர் அமைப்பான NSUI எந்த முக்கிய பதவியையும் வெல்லவில்லை. கடந்த ஆண்டு துணைத் தலைவர் பதவியை NSUI கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை அந்த அமைப்புக்கு கிடைத்த முடிவு பின்னடைவாக அமைந்தது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், மாணவர் வாக்காளர்கள் ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட குழுவாக இல்லை என்பதுதான். டெல்லி பல்கலைக்கழக மாணவர் அரசியலில் சாதி, உள்ளூர் சமூக பின்னணி, தனிப்பட்ட வேட்பாளரின் செல்வாக்கு, பிரச்சார திறன் போன்ற பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. காங்கிரஸ் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் சங்கர் மீனா, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தனது வாக்குகளை கணிசமாக அதிகரித்ததாகவும் கட்சி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருந்தாலும், அது வெற்றியாக மாறவில்லை.
துணைத் தலைவர் தேர்தலும் காங்கிரசுக்கு முக்கியமான சிக்கலை வெளிப்படுத்தியது. காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட தீபான்ஷு ஷோகீன் வெற்றி பெற்றார். மாணவர் விடுதிகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து அவர் மேற்கொண்ட பிரச்சாரம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் கட்சி அமைப்பை விட தனிப்பட்ட வேட்பாளரின் நேரடி அணுகுமுறையும் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற விவாதம் உருவாகியுள்ளது. இதற்கிடையில், பாஜக மற்றும் அதன் மாணவர் அமைப்பான ABVP-யும் இளம் தலைமுறையினரை நோக்கிய அணுகுமுறையை தீவிரப்படுத்தி வருகின்றன. மாணவர் போராட்டங்கள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் அரசியல் கவனத்தை பெற்றுள்ள நிலையில், இளைஞர்களுடன் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்பு கொள்ளும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன.
இந்த பின்னணியில், ராகுல் காந்திக்கு மாணவர்களிடம் நேரடி வரவேற்பு கிடைப்பதும், காங்கிரசுக்கு தேர்தல் அமைப்பில் அதே அளவிலான ஆதரவு கிடைப்பதும் இரு வேறு விஷயங்களாகத் தெரிகிறது. மாணவர்களிடம் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது ஒரு கட்டம் என்றால், அந்த ஆதரவை தொடர்ந்து அமைப்பாக மாற்றுவது மற்றொரு கட்டம். குறிப்பாக கல்லூரி முதல் வாக்குச்சாவடி வரை செயல்படும் உள்ளூர் தொண்டர்கள், வேட்பாளர் தேர்வு, தொடர் மாணவர் தொடர்பு, சமூக ஊடகப் பிரச்சாரம் உள்ளிட்ட பல அம்சங்கள் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் இளம் தலைமுறை அரசியல் உரையாடலில் முக்கியமான சக்தியாக உருவாகி வரும் நிலையில், மாணவர்களின் பிரச்சினைகளை முன்வைப்பது மட்டும் போதுமா அல்லது அதை நீண்டகால அமைப்பு மற்றும் நேரடி அரசியல் செயல்பாடுகளுடன் இணைக்க வேண்டுமா என்ற கேள்வி காங்கிரஸின் முன் உள்ளது. ‘சத்ரோன் கி கூஞ்ச்’ நிகழ்ச்சிகள் ராகுல் காந்தியின் தனிப்பட்ட இளைஞர் தொடர்பை அதிகரித்தாலும், டெல்லி மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் அந்த தொடர்பை கட்சி அமைப்பின் வலிமையாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்