Rahul Gandhi vs Kiren Rijiju 
இந்தியா

Rahul Gandhi vs Kiren Rijiju: ஓப்பனாக நடந்த விவாதம் - மகளிர் 30% இட ஒதுக்கீட்டை தடுப்பது யார்?

"மூன்று ஆண்டுகள் ஆகியும் மகளிர் 30% இட ஒதுக்கீடு ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? இப்போது ஏன் இதைத் தேவையில்லாமல் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க விரும்புகிறீர்கள் என்பதுதான் கேள்வி" என்று ராகுல் பதிலடி கொடுத்தார்.

மாலை முரசு செய்தி குழு

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இணைத்து நிறைவேற்றும் திட்டத்துக்கு எதிராக நீண்ட நாட்களாகக் குரல் கொடுத்து வருகிறது காங்கிரஸ்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் இடையே சனிக்கிழமை காலை ஆன்லைனில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறையினருடன் உரையாடல்களை நிகழ்த்தி வரும் ராகுல் காந்தி, இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து பதிலளிக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோவைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாசிட்டிவான செய்தி வெளிப்படுகிறது. பெண்கள் விஷயத்தில் ராகுல் காந்தியிடம் ஒரு தெளிவான மனமாற்றம் தெரிகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ அளிக்கும் என நம்புகிறேன்" என்று எழுதியிருந்தார்.

இரண்டு மணி நேரத்திற்குள் இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, 2023-ஆம் ஆண்டிலேயே காங்கிரஸின் முழு ஆதரவுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதை ரிஜிஜுவுக்கு நினைவூட்டினார்.

"மிஸ்டர் ரிஜிஜூ, பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரை விட யாருக்கு நன்றாக தெரியும்? காங்கிரஸின் முழு ஆதரவுடன் இந்த மசோதா ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது.

மூன்று ஆண்டுகள் ஆகியும் இது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? இப்போது ஏன் இதைத் தேவையில்லாமல் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க விரும்புகிறீர்கள் என்பதுதான் கேள்வி" என்று ராகுல் பதிலடி கொடுத்தார்.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா - பின்னணி என்ன?

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ என்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம், இதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இணைத்திருந்தது. இதனால், இதன் அமலாக்கம் 2034-க்குப் பிறகே சாத்தியமாகும் என்ற நிலை இருந்தது.

Lok Sabha delimitation

புதிய மசோதா, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது.

ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையுடன் இந்த மசோதாவை பாஜக அரசு இணைத்துள்ளதால், தற்போது நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.

தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் மூலம், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-லிருந்து 850 ஆக உயரும். அதில் 33%, அதாவது 273 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்பது கணக்கு.

ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்குப் பாதிப்பாகவும் அமையும் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.

இதனால், மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் இல்லாமல், மாநிலங்களுக்கு உரிய அதிகாரமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பது தென் மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.