அண்டை நாடான நேபாளத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்தியா ரூ.15,000 கோடி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நேபாள பிரதமர் பலேந்திர ஷா இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணத்தின்போது இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது, புதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மற்றும் எரிசக்தித் துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இதனுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில், சாலை மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேபாள பிரதமர் பலேந்திர ஷா, நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது வர்த்தகம், பொருளாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்தச் சந்திப்பின் முக்கிய அறிவிப்பாக நேபாளத்திற்கு இந்தியா ரூ.15,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி உதவியை வழங்க முடிவு செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.15,000 கோடி என்பது நேபாள நாணய மதிப்பில் சுமார் 24,000 கோடி ரூபாயாகும். இதில் ரூ.3,500 கோடி மானிய உதவியாக வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பதற்கும், புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். மீதமுள்ள ரூ.11,500 கோடி எரிசக்தித் துறை திட்டங்களுக்கான கடன் உதவியாக வழங்கப்படும். எந்தெந்த திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும், அதைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து இரு நாடுகளும் இணைந்து முடிவு செய்ய உள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு பெரும் உயிரிழப்புகளையும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, ராசுவா-போடேகோஷி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல இடங்களில் வீடுகள், சாலைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் முக்கியத் தேவையாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்தியா இந்த வளர்ச்சி உதவியை அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவி அறிவிப்புடன் இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்பிலும் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனக்பூர் நகரம் வரை செல்லும் சரயு-கமலா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இரு நாட்டுப் பிரதமர்களும் தொடங்கி வைத்தனர். இந்த ரயில் சேவை பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதுடன், ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கு இடையிலான சுற்றுலாவையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராக்சால்-காத்மாண்டு இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைத் திட்டத்திற்கான இறுதி இட ஆய்வு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தித் துறையிலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் 669 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் லோயர் அருண் நீர்மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் மோதிஹாரி பகுதியில் இருந்து நேபாளத்தின் அம்லேகஞ்ச் வரை செல்லும் பெட்ரோலியக் குழாய் திட்டத்தின் இரண்டாம் கட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் ஜாப்பா பகுதியில் புதிய பெட்ரோலிய முனையம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. சிலிகுரி - ஜாப்பா இடையிலான பெட்ரோலியக் குழாய் திட்டத்தையும் விரைவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
கல்வி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) வெளிநாட்டு வளாகம் அமைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் கிடைப்பதுடன், தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மையம், புத்தாக்க மையம் மற்றும் இந்தியாவில் நேபாள மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, விண்வெளித் தொழில்நுட்பம், காவல்துறைப் பயிற்சி, தடயவியல், மருத்துவம், ஆயுர்வேதம், நகர்ப்புற மேம்பாடு, கால்நடை மற்றும் மீன்வளத் துறை உள்ளிட்ட எட்டு முக்கியப் பிரிவுகளில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா - நேபாளம் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகம் வழியாக நேபாளத்திற்கு புதிய போக்குவரத்து வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் நேபாளமும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல; வரலாறு, கலாசாரம், மதம் மற்றும் மக்களிடையேயான உறவுகளால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட நாடுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய அறிவிப்புகள் மூலம் நேபாளத்தின் மறுகட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியாவுடனான உறவு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.