எசெல் ( Essel) குழுமத்தின் நிறுவனர் மற்றும் Chairman சுபாஷ் சந்திராவுக்கு எதிரான கடன் வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.22,006 கோடி மதிப்பிலான கடன் கோரிக்கைகளுக்கு, சுபாஷ் சந்திரா தனிப்பட்ட முறையில் ரூ.6.25 கோடி மட்டுமே செலுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட கடன் தீர்வு திட்டத்திற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக HDFC வங்கி மற்றும் LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுபாஷ் சந்திரா ரூ.22,000 கோடியை தனிப்பட்ட முறையில் கடன் வாங்கியவர் என்று கூறுவது தவறானது. எசெல் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றிருந்தன. அந்தக் கடன்களில் சிலவற்றுக்கு சுபாஷ் சந்திரா தனிப்பட்ட ஜாமீன்தாரராக இருந்தார். நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அந்தக் கடனுக்கு தனிப்பட்ட உத்தரவாதம் அளித்த சந்திராவிடம் பணத்தை வசூலிக்க கடன் கொடுத்த வங்கி மற்றும் நிறுவனங்களுக்கு உரிமை இருந்தது. இதன் அடிப்படையில்தான் சந்திராவுக்கு எதிராக தனிப்பட்ட திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ரூ.22,006 கோடி என்பது சந்திரா தனிப்பட்ட முறையில் வாங்கிய கடன் அல்ல. எசெல் குழும நிறுவனங்கள் வாங்கிய பல்வேறு கடன்களுக்கு அவர் வழங்கிய தனிப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையில், அவருக்கு எதிராக ஒப்புக்கொள்ளப்பட்ட மொத்தக் கோரிக்கை தொகை இதுவாகும். அதே நேரத்தில், அந்தக் கடன்களை வாங்கிய முதன்மை நிறுவனங்களும் தனியாக கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளது.
NCLT-யால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி, முதன்மை கடன் வாங்கியவர்களிடமிருந்து சுமார் ரூ.1,494 கோடியும் சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட பங்களிப்பு ரூ.6.25 கோடியும் என மொத்தமாக தொகை செலுத்தப்பட உள்ளது. இதில் சந்திரா செலுத்த வேண்டிய ரூ.6.25 கோடி மிகவும் குறைவான தொகை என்று சில பைனான்ஸ் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். LIC ஹவுசிங் பைனான்ஸுக்கு மட்டும் சந்திராவிடம் இருந்து பெற வேண்டியதாக ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கை ரூ.1,322.39 கோடி. ஆனால், NCLT அங்கீகரித்த திட்டத்தின்படி அதற்கு கிடைக்கவிருந்த தொகை சுமார் ரூ.38.09 லட்சம் மட்டுமே. இதனால், தனது நிலுவைத் தொகையில் மிகச் சிறிய பகுதியே கிடைக்கும் என கூறி LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் இந்தத் திட்டத்தை எதிர்த்து உள்ளது. மேலும் HDFC வங்கி, Axis வங்கி, Canara வங்கி, RBL வங்கி, Union வங்கி உள்ளிட்ட பல கடன் வங்கிகளும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சில முக்கிய வங்கிகள் திட்டத்தை எதிர்த்தாலும், மற்ற 80.81% இந்தத் திட்டத்திற்கு ஆதரவு என சொல்லப்படுகிறது. தேவையான பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததால், மாறுபட்ட கருத்து தெரிவித்த வங்கிகள் எதிர்ப்புகளை நிராகரித்து NCLT திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட சொத்துகளின் மதிப்பு குறைவாக இருப்பதாக தீர்வு நிபுணரின் மதிப்பீட்டில் தெரியவந்ததாக NCLT குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தை நிராகரித்து சந்திராவை திவால் நிலைக்கு கொண்டு சென்றால், கடன் வழங்குநர்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் தீர்ப்பாயம் கருதியது.
அதற்கு பதிலாக, சந்திராவின் திவால் நடவடிக்கை தீர்க்கப்பட்டு அவர் மீண்டும் நிதி ரீதியாக நிலைபெற்றால், முதன்மை கடன் வாங்கிய நிறுவனங்களிடமிருந்து பணத்தை மீட்க அதிக வாய்ப்பு இருக்கலாம் என்பதும் NCLT-யின் பார்வையாக இருந்தது. ஆனாலும் NCLT உத்தரவுக்கு எதிராக LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், தேசிய வீட்டு வசதி வங்கி மூலமாகவும் இந்த விவகாரத்தில் தலையீடு கோருவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை தொடர்ந்து HDFC வங்கியும் NCLT உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதனால், ரூ.22,006 கோடி கோரிக்கைகள் தொடர்பான இந்த விவகாரம் அடுத்தகட்டமாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்