இந்தியா

ஊர்க்காவல் படையினருக்கு ரூ.9000 ஊதியம் என்பது சுரண்டல் - ஒடிசா அரசை சாடியது உச்சநீதிமன்றம்!

ஊர்க்காவல் படையினருக்கு வெறும் 9 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குவது சுரண்டலைத் தவிர வேறொன்றுமில்லை என ஒடிசா அரசை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

Tamil Selvi Selvakumar

நாளொன்றுக்கு 533 ரூபாய் ஊதியத்தை ஊர்காவல் படையினருக்கு வழங்க வேண்டும் என்ற ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த அந்த மாநில அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் பி வி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது மாநிலத்தில் பணிபுரியும் காவல்துறையினர் 21 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியமாகப் பெறும் நிலையில், கிட்டத்தட்ட அதே பணியை மேற்கொள்ளும் ஊர்க்காவல் படையினருக்கு 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது சுரண்டல் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினர் இந்த சம்பளத்தில் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் எனவும் கேள்வியெழுப்பினர்.

தொடர்ந்து, 9 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கும் முடிவை ஒடிசா அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறி உத்தரவிட்டனர்.