இந்தியா

மீண்டும் அவைக்கு வந்த சஞ்சய் சிங்...வெளியேற சொன்ன பாஜகவினர்...அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!

Tamil Selvi Selvakumar

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் 3வது நாளாக முடங்கியது.


அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 3ம் நாளாக இன்று கூடியது. அப்போது மணிப்பூரின் 80 நாட்கள் நிலையை பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றுக்கூறி, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதும் அமளி தொடர்ந்ததால்,  2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல் மக்களவையிலும், அமளி நீடித்ததால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மாநிலங்களவையில் அவை தலைவர் இருக்கைக்கு அருகே சென்று அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பங்கேற்க தடை விதித்து ஜெகதீப் தன்கர் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து அவை நடவடிக்கைகளை புறக்கணித்து அனைத்து எதிர்கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மீண்டும் இரு அவைகளும் கூடிய நிலையில் மீண்டும் அமளி தொடர்ந்ததால், மக்களவை 2.30 மணி வரையும், மாநிலங்களவை 3 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் 2.30 மணிக்கு மக்களவை கூடியபோது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார். அப்போது அவரையும் பேச விடாமல் அமளி தொடர்ந்ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் மாநிலங்களவை மீண்டும் 3 மணிக்கு கூடியபோது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சஞ்சய் சிங் அவைக்கு வருகை புரிந்ததால் அவரை வெளியேற வலியுறுத்திய பாஜகவினரை எதிர்த்து அமளி தொடர்ந்தது. இதனால் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.