பெண்கள் குடும்பத்தை மட்டுமின்றி, தொழில் மற்றும் சமூகத்திலும் தலைமைப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ராமாயணத்தில் சீதையின் கதாபாத்திரம் ராமரை விட உயர்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் உபுண்டு மகளிர் தொழில் முனைவோர் சங்கக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ‘ஒன்றிணைந்து வளர்கிறோம் - சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் தினம்’ நிகழ்ச்சியின் 5-வது பதிப்பை சிவகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் பெண்களின் திறமை மற்றும் தியாகங்களைப் பாராட்டிய பேசினார். “ராமாயணத்தில் சீதையின் கதாபாத்திரம் ராமரை விட மிகவும் மேலானது. அவர் செய்த தியாகங்களும், சந்தித்த போராட்டங்களும் முன்மாதிரியானவை” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் பெண்கள் எப்போதும் படைப்பாற்றல் கொண்டவர்களாகவும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்களாகவும் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருந்து வருவதாக தெரிவித்தார். குடும்பத்தை நிர்வகிப்பது முதல் தொழில் நிறுவனங்களை உருவாக்குவது வரை பெண்கள் பல்வேறு பொறுப்புகளை திறம்பட கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பெண்களுக்கு மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவர்கள் சாதிக்கக்கூடியவைகளுக்கு எல்லையே இருக்காது” என்றும் தெரிவித்தார். மேலும், பெண்கள் கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து நிலைகளிலும் தலைமைப் பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்கள் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவது அரசின் கடமை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார். சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்து வருவதாகவும், கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 1.22 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படுவதாகவும் சிவகுமார் கூறினார்.
பெண்களுக்கான கடனுதவி, மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெறுபவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் பெண்கள் எனக் குறிப்பிட்ட அவர், “பெண்கள் சமையலறைக்குள் மட்டும் முடங்கிக் கிடக்க வேண்டியதில்லை” என்றும் தெரிவித்தார். பெண்கள் தங்கள் குடும்பத்தையும், தொழிலையும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நிர்வகித்து வருவதாகவும் சிவகுமார் பாராட்டினார். மேலும், பெண்கள் தொழில் தொடங்கி வளர்வதற்கு அரசு தேவையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இதனிடையே, இந்திய சமூகத்தில் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் இருப்பதாகவும், இந்த மனப்பான்மை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்கத்தையும் கற்று கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், பல்வேறு தனிப்பட்ட பின்னடைவுகளை எதிர்கொண்டபோதும் கட்சியை வழிநடத்தியதாக தெரிவித்தார். பிரதமராகும் வாய்ப்பு இருந்தபோதும், பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கை பிரதமராக முன்னிறுத்தியதும் பெண்களின் தியாகத்திற்கு ஓர் உதாரணம் என்று சிவகுமார் கூறினார்.
“பெண்கள் தலைவர்களை உருவாக்குகிறார்கள்” என்று குறிப்பிட்ட சிவகுமார், பெண்கள் தொழில், அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.